தமிழ்நாடு: மைக்ரோசாப்டில் பயன்படுத்தப்படும் "க்ரவுட் ஸ்ட்ரைக்" என்ற மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உலக அளவில் பெரிதளவிலான இணைய சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், முக்கியமாக விமான முன்பதிவு மற்றும் போர்டிங் சேவைகள் முடங்கியது. இதன் காரணமாக நாடு முழுவதும் 190க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
குறிப்பாக, கோவையிலிருந்து சென்னை செல்லும் இரண்டு விமானங்கள், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் செல்லும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதேபோல் டெல்லி, புனே செல்லும் விமானங்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டதால், பயணிகள் கோவை விமான நிலையத்தில் தவித்தனர்.
முக்கியமாக, சென்னை மற்றும் பெங்களூர், ஹைதராபாத் விமானங்களில் செல்ல வந்த பயணிகள் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், இணைப்பு விமானங்கள் மூலம் லண்டன் மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்த பயணிகளும் தவித்தனர்.
விமானம் ரத்து செய்யப்பட்ட தகவல், தாமதமாகும் தகவல் என எதையும் விமான சேவை நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர். மேலும் விமானம் ரத்து செய்யப்பட்டதோடு அடுத்த சேவை எப்போது துவங்கும் என்பதும் தெரியாததால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகினர். பலர் விமான பயணத்தை தவிர்த்து வீட்டுக்குச் சென்றனர்.
அதேபோல், இன்று மாலையில் இருந்து நள்ளிரவு வரையில் புறப்பட வேண்டிய டெல்லி, பெங்களூர், மும்பை, புனே, இந்தூர், ஹைதராபாத், கொல்கத்தா, விசாகப்பட்டினம், கோவா உள்ளிட்ட 14 புறப்பாடு விமானங்களும், இந்த பெருநகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 14 வருகை விமானங்களும் என மொத்தம் 28 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இன்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் 3 மணி நேரத்துக்கு மேலாக தாமதமாகி உள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில்,ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “சர்வதேச அளவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, சென்னை விமான நிலையத்தில் மட்டும் நடக்கவில்லை. எனவே, சர்வதேச அளவில் தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இன்று நள்ளிரவுக்குள் நிலைமை சீரடையும்” என தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: உலகளவில் மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கம்: திடீர் முடக்கத்திற்கு என்னக் காரணம்?