சென்னை: ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா போன்ற நாடுகளில், நேற்றிலிருந்து கனமழை பெய்து, மோசமான வானிலை நிலவி வருகிறது. இதை அடுத்து சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் செல்லும் விமானங்களும், அந்த நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று இரவு துபாயில் இருந்து சென்னை வந்து விட்டு, மீண்டும் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைப்போல் இன்று அதிகாலை துபாயில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், நேற்று இரவு சென்னையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதோடு இன்று அதிகாலை துபாயில் இருந்து சென்னை வந்து விட்டு மீண்டும் அதிகாலை சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு செல்ல வேண்டிய ஃபிளை துபாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நேற்று இரவு சென்னையில் இருந்து குவைத் சென்று விட்டு இன்று அதிகாலை குவைத்தில் இருந்து சென்னைக்கு திரும்பி வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதைப்போல் சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வர வேண்டிய ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இன்று அதிகாலை 4.30 மணிக்கு, சென்னையில் இருந்து சார்ஜா செல்ல வேண்டிய ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்களும், இந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானங்களும் என மொத்தம் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் இருந்து துபாய் அபுதாபி செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது! - Chennai Airport