சென்னை: குன்றத்தூர் - பல்லாவரம் சாலை, ஆண்டாங்குப்பம் பகுதியில் தனியார் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுபவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று தினசரி மருந்து கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், இன்றும் வழக்கம் போல் மருந்து கொடுப்பதற்காக அறையின் கதவு திறக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் சேர்ந்து கொண்டு, போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் மீது மிளகாய்ப்பொடியை தூவி அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், ஊழியர்கள் வைத்திருந்த சாவியை எடுத்து பூட்டை திறந்து கொண்டு, ஐந்து பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பணிபுரிந்த ஊழியர்கள், இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பிச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.