சென்னை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணா - ஜமுனா தம்பதியினர். இவர்கள் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை அக்கரை பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கி தோட்ட வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை பெற்றோர் இருவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் வெளியே ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, குழந்தை எதிர்பாராதவிதமாக நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளான். சிறிது நேரம் கழித்து குழந்தையைக் காணவில்லை என பெற்றோர் தேடிய போது, நீச்சல் குளத்தில் விழுந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக குழந்தையை மீட்டு பனையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: செங்கல் சூளையில் தேங்கிய நீரில் மூழ்கி அண்ணன் - தங்கை உயிரிழப்பு!
ஆனால், மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கானத்தூர் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் பிழைப்பு தேடி சென்னை வந்து வேலை செய்து வந்த நிலையில், களைப்பில் பெற்றோர்கள் இருவரும் உறங்கிய நேரத்தில், அருகில் உள்ள நீச்சல் குளத்தில் 5 வயது ஆண் குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்