தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வீரசிகாமணி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பெரியசாமிபுரம் கிராமத்தின் மேற்கு பகுதியில் சாலையின் ஓரமாக டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் இரண்டு மின்கம்பங்களில் ஒரு மின் கம்பம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னதாக பெய்த மழையின் காரணமாக அந்த மின் கம்பம் மிகவும் சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிந்தவாறு காணப்படுகிறது. இதனால் எந்த நேரமும் இந்த டிரான்ஸ்பார்மர் மின்கம்பம் கீழே விழும் அபாயத்தில் உள்ளதால் அப்பகுதி செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் அருகில் விவசாய நிலங்கள் உள்ளதால் விவசாய நிலத்திற்கு வரும் விவசாயிகள் மிகவும் அச்சத்துடன் அப்பகுதியைக் கடந்து செல்கின்றனர். இதனைச் சரிசெய்து தரப் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்து வருவதால் இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது.
மின்சார துறை அதிகாரிகள், ஊழியர்கள் இந்த டிரான்ஸ்பார்மரை கடந்து தான் சென்று வருகின்றனர். ஆனாலும் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது எனப் பொதுமக்கள் கூறுகின்றனர். மாதாந்திர பணி காரணமாக மாதத்திற்கு ஒருமுறை மின்தடை செய்யப்படும் பொழுதும் போதிய அளவு பராமரிப்பு பணி நடைபெறவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மின்கம்பம் கீழே விழுந்து ஏதேனும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்னர் உடனடியாக இந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகளும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் தென்காசி மாவட்டத்தில் குருக்கள்பட்டி மற்றும் மேல்நிலை நல்லூர், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு உள்ளாக மின்சாரம் தாக்கி சிறுவர்கள் உட்பட 5 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இவ்வாறு விபத்து நேரிடும் முன்பு இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்கப் பொதுமக்களும், விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து; 2 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!