ராமநாதபுரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, எல்லைத்தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகின்றன. இந்த நிலையில், மீன்வளத்துறையிடம் உரிய அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை தனுஷ்கோடியில் இருந்து 4 நாட்டு படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, பாம்பன் பகுதியை சேர்ந்த மூன்று படகுகள் மற்றும் தனுஷ்கோடியை சேர்ந்த ஒரு படகு என மொத்தம் நான்கு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அதிலிருந்த 25 மீனவர்களையும் கைது செய்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதுகுளத்தூர் அருகே மு.தூரி கிராமத்தில் புரவி எடுப்பு திருவிழா! - Puravi Eduppu Thiruvizha
ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில், தற்போது மேலும் 25 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையை கண்டித்தும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பாம்பன் பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பாம்பன் கடல் பகுதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயம்பேட்டில் போதை மாத்திரைகள் விற்பனை.. 17 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது! - Drug Tablets selling in Chennai