திருநெல்வேலி: கூத்தங்குழி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் அஜித் (31). மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று மாலை கூத்தங்குழி அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் அஜித்தை கத்தியால் சரமாரியாக வயிற்றில் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கூடங்குளம் போலீசார் உயிரிழந்த அஜித்தின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையான அஜித்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்புக்கும் கோயில் திருவிழாவின் போது பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் அஜித் மீது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, அதே ஊரைச் சேர்ந்த சகோதரர்களான ஆஞ்சிலே, ரகுமான் ரோஜன், அஜய் மற்றும் பார்த்தீபன் ஆகியோர் அஜித்தை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து தெரிய வந்துள்ளது. எனவே, தப்பியோடிய ஐந்து பேரை கூடங்குளம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதில், பார்த்திபனை தவிர மீதி நால்வரும் உடன் பிறந்த சகோதரர்கள் என கூறப்படுகிறது. மேலும், கொலை செய்யப்பட்ட அஜித் மீது கூடங்குளம் காவல் நிலையத்தில் மணல் கடத்தல், திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன் விரோதத்தில் மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கரூரில் ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக்கொலை.. தகாத உறவால் நேர்ந்த கொடூரம் - பின்னணி என்ன?