விருதுநகர்: சிவகாசியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பாக 4-ஆவது பாதுகாப்பு விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இதனை விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் துவக்கி வைத்தார். கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல் முறையாகப் பட்டாசு வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.
இதில் பலவகையான பட்டாசுகள் காட்சிப்படுத்தப்பட்டன. தொடர்ந்து தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 3 முக்கியமான தீர்மானங்கள் நடைபெற்றது.
அதில் நிரந்தர பட்டாசுக் கடை உரிமங்களை புதுப்பிக்க விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிரந்தர பட்டாசுக் கடை உரிமங்களை, வெடிபொருள் சட்டம் 2008 விதியின் 106 மற்றும் 112 இன் படி ஐந்து ஆண்டுகளுக்குள் புதுப்பித்து வழங்க வேண்டும்.
தற்காலிக உரிமங்களைத் தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்கள் வணிகம் செய்யும் வகையில் 30 நாட்களுக்கு முன்பாக குடும்பங்கள் வாங்க வேண்டும். இதனை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன், "சிவகாசியில் முதல் முறையாக இந்த ஆண்டு வர்த்தக பட்டாசு கண்காட்சி நடைபெற்றது. பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பட்டாசுக் கடை உரிமங்களை புதுப்பிக்க ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இறுதிக்குள் விண்ணப்பம் செய்கிறோம். பெரும்பாலான மாவட்டங்களில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து தீபாவளி சமயத்தில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வழங்குகிறார்கள்.
இதனால் குறித்த நேரத்தில் கொள்முதல் செய்ய இயலாமல் வணிகம் தடைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பட்டாசு வணிகம் தொடர்ந்து சீராக நடைபெற, விண்ணப்பம் செய்த 90 நாட்களுக்குள் புதுப்பித்து வழங்கப்பட வேண்டும். பெரும்பான்மையான மாவட்டங்களில் பட்டாசுக் கடைக்கான உரிமம் 1 ஆண்டு அல்லது 2 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்குகிறார்கள். இதனால் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர்கள் வழங்கும் பட்டாசு கடை உரிமத்த, 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்," தீபாவளி நெருங்கும் சமயத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாலும், சிவகாசியிலிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பட்டாசு அனுப்பவது சிரமமாக உள்ளது. அதனால் மாநகராட்சி மற்றும் வருவாய் கோட்டங்களில் தற்காலிக பட்டாசுக்கடை அமைப்பதற்கு, தீபாவளி பண்டிகைக்கு 60 நாட்களுக்கு முன்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்து, பண்டிகைக்கு 30 நாட்கள் முன்பாக உரிமங்கள் வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாக பிரதமர் பேச்சு உள்ளது" - ஜவாஹிருல்லா கருத்து!