சென்னை: சென்னையை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் மின்சார ரயில் பாதை அருகே உள்ள செடிகள் நிறைந்த பகுதியில், இன்று (பிப்.29) திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே பாதையின் அருகில் 5 அடி உயரத்தில் புல் வளர்ந்திருந்த நிலையில், தற்போது நிலவும் வெயிலின் காரணமாக, காய்ந்து சருகாகி இருந்துள்ளது. இந்த நிலையில், இன்று திடீரென அவை தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ரயில்வே காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர், அருகில் உள்ள தனியார் கட்டடத்தில் இருந்த பணியாளர்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்தனர். காய்ந்த புல்லாக இருந்ததால் அதிக அளவில் நெருப்பு பற்றி எரிந்து அப்பகுதி முழுக்க புகை மண்டலமாக மாறியது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ரயில்வே பாதையின் இரு புறங்களிலும் வளர்ந்திருக்கும் புல் செடிகள் முறையாக வெட்டி பராமரிக்கப்படாததன் காரணமாக இவ்வாறு தீப்பிடித்து எரியும் நிலை ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார், யாரேனும் சிகரெட் பிடித்து போட்டுச் சென்றனரா அல்லது போதை ஆசாமிகளின் செயலா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரயில் கடந்து செல்லும்போது ஏற்படும் காற்றின் வேகத்தால் தீ பரவக்கூடும் என்பதால், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரயில்கள் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து, தீ அணைக்கப்பட்ட பின்னரே ரயில்கள் இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.