மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ளது கட்ரா பாளையம். வணிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில் பணிபுரியும் பெண்களுக்கான தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், விடுதியில் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்து வந்த பெரியார் பேருந்து நிலைய தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்டனர்.
முதல் கட்ட தகவல்களின் படி, அந்த விடுதியில் உள்ள குளிர்சாதனப் பெட்டி திடீரென வெடித்ததே இந்த தீ விபத்திற்கு காரணம் என போலிசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் விடுதியில் தங்கியிருந்த பெண் ஆசிரியர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தோரின் பெயர்கள் பரிமள சௌந்தரி மற்றும் சரண்யா என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த நபர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு, அங்கு இவர்களுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த விடுதியில் மொத்தம் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திடீர் நகர் போலீசார் இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையிலேயே நடந்த இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாகவே மிகப் பழமையான இந்த கட்டடத்தை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, கடந்த ஆண்டே மதுரை மாநகராட்சி தற்போது தீ விபத்து நடந்த இந்த கட்டடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால், இதற்கு எந்தவித நடவடிக்கையும் கட்டட உரிமையாளர் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது விபத்து நடந்த இடத்தை மதுரை மாநகராட்சி ஆணையாளர் வினோத்குமார், ஆர்டிஓ ஷாலினி ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த நிலையில், விடுதி நடத்தி வந்த உரிமையாளர் இன்பா ஜெகதீஸன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.