கரூர்: திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வையம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (33). இவர் பள்ளபட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸ் முதல் மாடியில் எம்.ஆர்.வி. சிட்பண்ட்ஸ் மற்றும் பைனான்ஸ் பி லிமிடெட் என்ற பெயரில் ஏலச்சீட்டு நடத்துவதாக விளம்பரம் செய்துள்ளார். அதன்படி, கடந்த மே 1ம் தேதி முதல் பணத்தை வசூல் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது பெயரில் பள்ளபட்டியில் எவ்வித சீட்டு கம்பெனியும் நடத்தப்படவில்லை என்று எம்ஆர். விஜயபாஸ்கர் தனது வழக்கறிஞர் மூலம் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அரவக்குறிச்சி போலீசார் பள்ளபட்டி சென்று சம்பந்தப்பட்ட இடத்தில், மணப்பாறை ஆர். ராஜ்குமார் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், எம்.ஆர்.வி என்ற தனது நிறுவனத்தின் பெயரைச் பயன்படுத்தி அரவக்குறிச்சி பள்ளபட்டியில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், வேடசந்துாரில் ஒரு தொகையும் வசூல் செய்ததாக கூறியுள்ளார்.
மேலும், எனது பெயர் மணப்பாறை எம்.ராஜ்குமார். எனவே அதில் உள்ள எழுத்துக்களைக் கொண்டு எம்.ஆர்.வி., என்று தொடங்கி ஆர்.சி.க்கு விண்ணப்பித்துள்ளதாகவும், இதற்கும், முன்னாள் அமைச்சருக்கும் தனது நிறுவனத்தின் பெயருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் தொழில் உரிமம் பெறாமல் ஏலச்சீட்டு நடத்தி பணம் வசூல் செய்தது, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் பெயரில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக ராஜகுமாரை அரவக்குறிச்சி போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்; கேசவ விநாயகத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!