சென்னை: தமிழக அரசின் 2024 - 2025 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் குறித்து நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் விளக்கமளித்தார்.
அப்போது அவர், “தேசிய அளவில் நிதி பற்றாக்குறை 5.10 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் நிதி பற்றாக்குறை 3.44 சதவீதமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி எப்படி முக்கியமோ, அப்படி தான் பண வீக்கமும் முக்கியம். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை.
2024 - 2025ஆம் ஆண்டிற்கு 45 ஆயிரம் கோடி நாம் கட்டமைப்பிற்காக செலவிட உள்ளோம். மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இதில் அதிகம் செலவிடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என நம்முடைய நிதி பொறுப்புடைமை சட்டம், நிதிக்குழு சொல்கிறது. அந்த வரம்பிற்குள் நாம் இருக்கிறோம்.
அதேநேரம் Debt to GDP மொத்த பொருளாதாரத்தின் அளவு, அதில் கடன் எவ்வளவு என்பதில், சரிவு நோக்கி படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பது 15வது நிதிக்குழு அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரைப்பது. அந்த வகையில் நாம் சரிவை நோக்கி படிப்படியாகக் குறைத்துக் கொண்டிருக்கிறோம்.
நிறைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வரிஏய்ப்பைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மிக நெருக்கடியான காலகட்டத்தில் நம்முடைய வரி வருவாய் எவ்வளவு சிக்கல்களுக்குள்ளானது என நிதிநிலை அறிக்கையிலும் நிதி அமைச்சர் விளக்கமாக எடுத்துச் சொன்னார். தமிழ்நாடு சமீபத்தில் சந்தித்த இரண்டு இயற்கை பேரிடர்கள் அதற்கு மிக முக்கியமான காரணம்.
அந்த இயற்கை பேரிடர்களால் நமக்கு வருவாயில் குறைவு ஏற்பட்டது. வருவாய் அதிகம் கொடுக்கக்கூடிய சென்னை, சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மிக்ஜாம் புயலாம் மிகவும் பாதிக்கப்பட்டன. தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. வருவாய் குறைவு அதனால் வந்தது. அந்த வெள்ள நிவாரணத்திற்காகவும் நாம் செலவு செய்ய வேண்டியதாக இருந்தது.
அதேபோல நீண்ட கால கட்டுமானத்திற்காகவும் நீண்ட கால வெள்ள நிவாரணத்திற்காகவும், குறுகிய கால நிவாரணத்திற்காகவும் நாம் அதிகம் செலவு செய்ய வேண்டியதாக இருந்தது. இந்த நெருக்கடிக்கு இடையே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
ஒன்றிய அரசின் நிதிப்பகிர்வு ஒவ்வொரு நிதிக்குழுவாக நமக்கு குறைந்து கொண்டே வந்துள்ளது. இது 6.64 சதவீதமாக இருந்து இப்போது 4.08 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. மேலும், ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கக் கூடிய மானிய உதவிகள் ஒவ்வொரு வருடமாகக் குறைந்து கொண்டே வருகிறது.
தமிழக அரசின் வருவாய் 1 லட்சத்து 95 ஆயிரத்து 173 கோடி, வரி அல்லாத வருவாய் 30 ஆயிரத்து 728 கோடி, மத்திய அரசு மானியம் 23 ஆயிரத்து 354 கோடி, மத்திய அரசு வரி பகிர்வு 49 ஆயிரத்து 755 கோடி என மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 10 கோடியாக உள்ளது. 2025 மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் நிலுவையில் உள்ள கடன் ரூ.8.33 லட்சம் கோடியாக இருக்கும்.
வணிக வரி மூலம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 381 கோடியும், பத்திர பதிவுத்துறை மூல 23 ஆயிரத்து 370 கோடியும், கலால் மூலம் 12 ஆயிரத்து 247 கோடியும், மோட்டார் வாகனங்கள் மூலம் 11 ஆயிரத்து 560 கோடியும், மற்றவைகளில் இருந்து 4 ஆயிரத்து 615 கோடி வருவாயும் கிடைத்துள்ளது. மோட்டார் வாகனங்கள் விற்பனையில் இருசக்கர வாகனங்களை விட நான்கு மற்றும் சொகுசு வாகனங்களின் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனால் அதன்மூலம் கிடைக்கக்கூடிய வருவாயும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் நஷ்டத்தை தமிழக அரசு ஏற்க வேண்டியுள்ளது. அப்படி சென்ற வருடம் அதாவது நடப்பு நிதி ஆண்டில் கொடுக்க வேண்டும் என யோசித்திருந்தது 3 ஆயிரம் கோடி ரூபாய் ஆனால் கொடுத்திருப்பது ரூ.15 ஆயிரம் கோடி. மொத்தம் 17 ஆயிரத்து 717 கோடி ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது. இது வருவாய் பற்றாக்குறையில் பிரதிபலிக்கிறது.
தமிழ்நாடு பொருளாதாரம் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. தேசிய சராசரியை விட நம்முடைய வளர்ச்சி சதவீதம் அதிகம், நம்முடைய பணவீக்கம் குறைவு. கணக்குகளின் படி இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம்.
ஜிஎஸ்டி இழப்பீடு 20 ஆயிரம் கோடி, அதேபோல் சென்னை மெட்ரோவின் முதல்கட்ட திட்டம் ஒன்றிய அரசும், தமிழக அரசும் சேர்ந்து பங்களிப்பு கொடுத்து பன்னாட்டு உதவியுடன் நிறைவேற்றப்பட்ட திட்டம். அது கிடைக்காததால் 63ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய சென்னை மெட்ரோ ரயில் கட்டமைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. முழுவதும் நாம் தான் நிதி அளிக்கிறோம். இந்த ஆண்டு 9 ஆயிரம் கோடி கொடுத்துள்ளோம். அடுத்த ஆண்டு 12 ஆயிரம் கோடி கொடுக்க உள்ளோம். இவைகள் எல்லாம் வருவாய் பற்றாக்குறையில் பிரதிபலிக்கிறது.
இதுகுறித்து ஒன்றிய அரசிடம் பேசியுள்ளோம், முதலமைச்சரும் பேசியுள்ளார். 12 ஆயிரம் கோடி நிதி கிடைத்தால் எந்தளவிற்கு நலத்திட்ட உதவிகள் செய்ய முடியும். அல்லது கடன் சற்று குறைவாக வாங்க முடியும்” எனத் தெரிவித்தார்.
பின்னர் இல்லம் தேடி கல்விக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “கரோனா காலத்தில் கற்றல் இழப்பீடுகளைத் தடுக்க ரூ.200 கோடி மதிப்பீட்டில் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது எந்தெந்த பகுதிகளுக்குத் தேவை உள்ளதென கண்டறிந்து அந்த திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
பத்திரப்பதிவு துறை, டாஸ்மாக்கில் எதிர்பார்த்த வருவாய் இருந்ததா என்ற கேள்விக்கு, “பத்திரப்பதிவு துறையைப் பொறுத்தவரையில் முதல் மூன்று மாதங்களின் எதிர்பார்ப்புகளை விடக் குறைவாக இருந்தது. இப்போது சற்று பரவாயில்லை. எடுத்த மாற்றங்கள் முதல் காலாண்டு, அரையாண்டில் தான் எடுத்தோம். அதன் முழுப்பலன் அடுத்த நிதியாண்டில் தான் தெரியவரும். டாஸ்மாக்கில் விலை ஏற்றி சிறிது நாட்கள் தான் ஆகிறது. கொஞ்ச நாள்களில் பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.