சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கியது. அந்த வகையில், நேற்று (ஜூன் 26) நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரையில் பேசினார்.
அப்போது பேசிய அவர், "நம்முடைய மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்திற்கான ஒப்புதல் நிலுவையில் இருக்கக்கூடிய நிலையிலும்கூட, இந்த திட்டத்திற்கான முழு செலவினத்தையும் நமது தமிழ்நாட்டின் சொந்த மாநில நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான முழு செலவினத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டிருக்கின்ற காரணத்தால், தமிழ்நாடு அரசிற்கு மிகக்கடுமையான நிதிச்சுமை தற்போது ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக, மாநில அரசுக்கு இந்த வருடம் மட்டும் ஏறத்தாழ ரூ.12 ஆயிரம் கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக இந்த ஆண்டு நம்முடைய அரசு ரூ.12 ஆயிரம் கோடியை வழங்கியிருக்கிறது. மத்திய அரசு, ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருக்கக்கூடிய வகையில் இத்திட்டத்திற்கான நிதியை வழங்கியிருக்குமேயானால், இந்த 12,000 கோடி ரூபாயை நாம் நம்முடைய சொந்த நிதியிலிருந்து இந்தத் திட்டத்திற்கு செலவழிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.
நான் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்கிறேன், அந்த ரூ.12,000 கோடியை இந்த திட்டத்திற்காக செலவழிப்பதற்குப் பதிலாக அரசினுடைய மற்ற திட்டங்களுக்கெல்லாம் நாம் ஒதுக்கீடு செய்து செலவழித்திருந்தால், அதன்மூலமாக 25,000 புதிய பேருந்துகளை நாம் வாங்கியிருக்கலாம், நம்முடைய மாநிலத்தில் இருக்கக்கூடிய பேருந்துகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தியிருக்கக் கூடிய வாய்ப்பை நாம் பெற்றிருக்க முடியும்.
அதேபோன்று, 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நாம் கிராமச் சாலைகளை அமைத்து முடித்திருக்கலாம். முதலமைச்சர் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் 10,000 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார் என்றால், அந்த 10,000 கிலோ மீட்டர் சாலை என்பது 30,000 கிலோ மீட்டர் சாலையாக உயர்ந்து, நீங்கள் கேட்கக்கூடிய அத்தனை இடங்களிலும் சாலைகள் அமைக்கக்கூடிய வாய்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றிருக்க முடியும்.
இதுமட்டும் அல்லாது, 3.50 லட்சம் வீடுகளை நாம் புதிதாகக் கட்டியிருக்க முடியும். 50,000 புதிய வகுப்பறைகளை நம்முடைய பள்ளிகளிலே நாம் உருவாக்கியிருக்க முடியும். ஆகவே, இந்த 12,000 கோடி ரூபாயை மட்டும் நாம் இழந்திருக்கிறோமா? என்றால் இல்லை, இத்தனை திட்டப் பணிகளையும் அதனுடன் சேர்த்தே நாம் இழந்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கலைமாமணி கலைஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்" - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு