சென்னை: நடைபெற இருக்கும் நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு துவங்க உள்ளது. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் 950 வேட்பாளர்கள் போட்டியிட தகுதியானவர்களாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் அதிகப்படியாக கரூரில் 54 பேரும், நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேரும் போட்டியிட உள்ளனர்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின்படி, வேட்பு மனுத் தாக்கல் செய்யும் கடைசி நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்களது பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அந்த வகையில், கடந்த மார்ச் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்கிற நிலையில், கடந்த 17ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், துணை வாக்காளர் பட்டியல் அச்சடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலை விட, 4 லட்சத்து 43 ஆயிரத்து 577 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் தான் அதிக வாக்காளர்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அத்தொகுதியில் 11 லட்சத்து 80 ஆயிரத்து 263 ஆண் வாக்காளர்களும், 12 லட்சத்து ஆயிரத்து 427 பெண் வேட்பாளர்கள் மற்றும் 429 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 வாக்காளர்கள் உள்ளனர்.
அதேபோல், குறைந்தபட்ச வாக்காளர்கள் நாகப்பட்டினம் தொகுதியில் உள்ளனர். மொத்தம் 13 லட்சத்து 45 ஆயிரத்து 120 வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில் 6 லட்சத்து 57 ஆயிரத்து 857 பேர ஆண்களும், 6 லட்சத்து 87 ஆயிரத்து 181 பெண்களும் , 82 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.
இதனிடையே, தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி, இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அதன் நகல் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் களம் கானும் 950 வேட்பாளர்கள்.. வெளியானது இறுதி வேட்பாளர்கள் பட்டியல்!