சென்னை: சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநரான சத்தியதாஸ் - ஷியாமளா தம்பதிக்கு திருமணம் ஆகி ஏற்கனவே இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், சத்தியதாஸ் மனைவி மூன்றாவதாக கர்ப்பம் தரித்தார். மனைவி கர்ப்பம் அடைந்ததை அடுத்து, அதுவும் தனக்கு பெண் பிள்ளையாக பிறக்கப் போகிறது என்று நினைத்து அதனை விற்று விட சத்தியதாஸ் முடிவு செய்துள்ளார்.
இது சம்பந்தமாக குழந்தையை விற்பனை செய்வதற்காக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இடைத்தரகர்கள் இருவரை தனது நண்பர் கணேஷ் மூலம் அணுகியுள்ளார். அதனைத் தொடர்ந்து, இரண்டரை லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டு, முன்பணமாக ரூ.1 லட்சம் பெறப்பட்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில், கர்ப்பம் தரித்த சத்தியதாஸ் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்து ஒரு வார காலமான நிலையில், குழந்தையினை சத்தியதாஸ் சம்பந்தப்பட்ட இடைத்தரர்களிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தையின் தாய், கணவரின் இந்த குழந்தை விற்பனை சம்பவம் குறித்து வியாசர்பாடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக தெரிகிறது.
பின்னர் சத்தியதாஸிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இடைத்தரகர்களாக செயல்பட்ட திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சரண்யா மற்றும் பவானி ஆகிய இரு பெண்களையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ய இருவரும் பேசி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, குழந்தையின் தந்தை மற்றும் கணேஷ் ஆகியோரையும் கைது செய்த வியாசர்பாடி காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தையின் தாயிடம் ஒப்படைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; தமிழ்நாட்டில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்! - kolkata woman doctor case