கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட உலியூர் வனப்பகுதியில் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான நீலகிரி கிழக்கு சரிவு சோழமாதேவி வனப்பகுதியில் புலி ஒன்று உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட்டது. பின்னர், இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில், உதவி வனப் பாதுகாவலர் ராஜ்குமார் தலைமையிலான வனப் பணியாளர்கள் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். இதில் உயிரிழந்தது ஒன்பது வயது மதிக்கத்தக்க பெண் புலி என்பது தெரிய வந்தது. மேலும், இரு புலிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்த புலியின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, அதன் காரணமாகவே இந்த புலி உயிரிழந்தது எனவும் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து, தேசிய புலிகள் காப்பகத்தின் விதிமுறைகள் படி சூழலியல் ஆர்வலர்கள் முன்னிலையில், மருத்துவக் குழுவினர் உயிரிழந்த புலியின் உடலில் பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர், அதன் உடலை அங்கேயே எரியூட்டினார். மேலும், இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டி சிறுமுகை வனச்சரகம் அமைந்துள்ளதால், இந்தப் பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக, உலியூர் வனப்பகுதிக்கு புலிகள் அதிக அளவில் வந்து செல்கிறது. தற்போது உயிரிழந்த புலியின் வயது 8 முதல் 9 வரை இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எல்லைப் பிரச்னையில் அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக இரு புலிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பலத்த காயமடைந்த இந்த புலி உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், என்டிசிஏ வழிகாட்டுதலின் படி வனத்துறை அதிகாரிகள், மருத்துவக் குழுவினர், சூழலியல் ஆர்வலர்கள் முன்னிலையில் அதன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே எரியூட்டப்பட்டது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பள்ளி - கார் ஷெட் - குடியிருப்பு.. திருப்பத்தூரை பரபரப்பாக்கிய சிறுத்தை பிடிபட்டது!