சென்னை: வளைகுடா நாடான பக்ரைனில் இருந்து, கல்ஃப் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சுமார் 167 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த, கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த, அப்ரின் பர்வீன்(41) என்ற பெண் பயணிக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பெண் பயணி வலியால் துடித்துள்ளார். அதனைக் கண்ட விமான பணிப் பெண்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, விமானிக்கும் அவசரமாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, பயணி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது உள்ளது. எனவே விமானம் தரை இறங்குவதற்கு, முன்னுரிமை அளித்து, முதலில் தரையிறங்க அனுமதியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே வலியால் துடித்த அந்த பெண் பயணி, அவரது இருக்கையில் தூங்குவது போல் சாய்ந்து இருந்தார். எனவே வலி குறைந்து, பெண் பயணி தூங்குகிறார் என்று விமான பணிப்பெண்கள் கருதினர். இதற்கு இடையே நேற்று அதிகாலை 3.20 மணிக்கு, சென்னையில் தரை இறங்க வேண்டிய, அந்த விமானம், 17 நிமிடங்கள் முன்னதாக, அதிகாலை 3.03 மணிக்கு சென்னையில் தரை இறங்கியது.
உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர், விமானத்துக்குள் ஏறி, அந்த பெண் பயணியை பரிசோதித்தனர். ஆனால் அவர் இருக்கையில் சாய்ந்த நிலையில் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பெண் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகவும் மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, விமானத்திலிருந்து மற்ற பயணிகள் கீழே இறங்கி விட்ட பின்பு, விமான ஊழியர்கள் விமானத்திற்குள் உயிரிழந்த பெண்ணின் உடலை, விமானத்தை விட்டு கீழே இறங்கினார்கள். பின்னர் சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு கரூரில் உள்ள அப்ரின் பர்வீன் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயணிக்கு நட், போல்ட் விழுந்த சான்ட்விச்: இண்டிகோ வழங்கியதா? என்ன நடந்தது?