தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (31). இவருடைய மனைவி சிவரஞ்சனி, இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்ப வறுமை காரணமாக, சிவரஞ்சனி மலேசியாவிற்கு வேலைக்கு சென்று, அங்கு வேலை பார்த்து வருகிறார். மது போதைக்கு அடிமையான பாலசுப்பிரமணியம் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில், குடிக்க பணம் இல்லாமல் விரக்தியில் இருந்த பாலசுப்பிரமணியம், அவ்வப்போது தனது மகளின் கைகளில் பிளேடால் வெட்டியும், சிகரெட்டால் சுட்டும் குழந்தையைத் துன்புறுத்தி, அதை வீடியோ எடுத்து வெளிநாட்டில் உள்ள மனைவிக்கு அனுப்பி வைத்து, மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
கடுமையான சித்ரவதையால் தனது 4 வயது மகள் அலறித் துடிப்பதை வீடியோவில் கண்டு கலங்கிய சிவரஞ்சனி, மலேசியாவில் இருந்து அதிராம்பட்டினத்தில் உள்ள சமூக ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு, தனது மகளின் பரிதாப நிலை குறித்தும், தனது கணவர் மகளுக்கு செய்து வரும் கொடுமைகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாலசுப்பிரமணியத்தின் தாய் வனரோஜா அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் முருகேசன், உடனடியாக பாலசுப்பிரமணியம் வீட்டிற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில், மலேசியாவில் உள்ள மனைவியை சொந்த ஊருக்கு வரவழைக்க, தனது குழந்தையை சூடு வைத்து துன்புறுத்தியதாக பாலசுப்பிரமணியம் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பாலசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். அவரது மகளை மீட்ட போலீசார், தஞ்சாவூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் உள்ள தனியார் ஏடிஎம்-ல் நூதன முறையில் ரூ.6 லட்சம் கொள்ளை! - ATM Robbery In Chennai