கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சூலூர் அருகே போகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கோயில் ஒன்றில் அர்ச்சராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், மதிய வேளையில் மணிகண்டன், அவரது மகள் தமிழ்செல்வி(15) மற்றும் அவரது அண்ணன் மகள் புவனா(13) ஆகிய இருவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக வீட்டுக்கு அருகே உள்ள குட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், மூவரும் குட்டையில் குளித்துக் கொண்டிருந்த போது, தமிழ்செல்வி மற்றும் புவனா இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். ஆனால், இருவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தால், தண்ணீரில் மூழ்கத் துவங்கியுள்ளனர். இதனைக் கண்ட மணிகண்டன் இருவரையும் காப்பாற்ற ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டனும் சேற்றில் சிக்கிக் கொண்டதால், மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, குளிக்கச் சென்ற மூவரும் நீண்ட நேரமாகியும் திரும்பி வராத காரணத்தால், சந்தேகமடைந்த மணிகண்டனின் மனைவி அவர்களைத் தேடி குட்டைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்த போது, கரையில் செருப்புகள் மட்டும் கிடந்துள்ளது. அதில், சந்தேகமடைந்த மணிகண்டனின் மனைவி ஊர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் குட்டையின் ஆழமான பகுதிகளில் இறங்கித் தேடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, சேற்றில் சிக்கியிருந்த மூவரது உடல்களையும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். பின்னர், சம்ப இடத்திற்கு வந்த சுல்தான்பேட்டை போலீசார் நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க குட்டைக்கு அழைத்துச் சென்ற தந்தை உட்பட மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.