தேனி: ஆண்டிபட்டி அருகே தாழையூத்து மலை அடிவாரப் பகுதியில் இரவு நேரங்களில் தென்னை மரத் தோட்டங்களில் முகாமிட்டும் காட்டு யானைகள் கூட்டம், ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட மரங்களை சேதமாக்கியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள தாழையூத்து மலையடிவார பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக, இப்பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட தென்னந்தோப்புகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளது. இந்த நிலையில், இரவு நேரங்களில் மலைப் பகுதியில் இருந்து இறங்கி வரும் காட்டு யானைக் கூட்டம், தென்னந்தோப்புகளிலேயே முகாமிட்டு, அங்குள்ள மரங்களை உடைத்து தென்னங்குருத்துக்களைத் தின்று, மரங்களை முற்றிலும் உடைத்து நாசப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து இரவில் படையெடுக்கும் யானைகள் கூட்டம் தென்னந்தோப்பை முற்றிலும் சேதப்படுத்தியுள்ளதாகவும், அதேபோல, நேற்று (ஜன.24) இரவு மட்டும் 400-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை உடைத்து, தென்னங்குருத்துக்களைத் தின்றும், இளநீர் காய்களைப் பறித்தும் அட்டூழியம் செய்துள்ளதாக விவசாய்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால், பத்துக்கும் மேற்பட்ட விவசாய தோட்டங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. யானைகள் நடமாட்டத்தால், விவசாய தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்சுதல், மரங்களை பராமரித்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகளுக்கு செல்லவே விவசாயிகள் அச்சமடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கிராம மக்களை காக்க களமிறங்கிய கும்கி யானை முத்து.. நிம்மதியில் பெருமூச்சு விட்ட மக்கள்!
இதுகுறித்து ஏற்கனவே இப்பகுதி விவசாயிகள் கண்டமனூர் வனத்துறையினருக்கும், தேனி மாவட்ட வருவாய் துறையினருக்கும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
எனவே உரிய நடவடிக்கை எடுத்து தென்னந்தோப்பில் புகுந்து நாசப்படுத்தும் யானைக் கூட்டத்தை அடர் வனப்பகுதிகளுக்குள் விரட்டி விவசாயிகளையும், விவசாய விளை நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும், தேனி சுப்பிரமணி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தாழையூத்து பகுதி தென்னை விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.