திருவாரூர்: நீர் வாய்க்கால் கடந்த 50 வருடங்களாகத் தூர்வாரப்படாததால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், தரிசு நிலமாக இருப்பதால் அவற்றை ரியல் எஸ்டேட் அதிபர்கள் பயன்படுத்திக் கொள்வதாக அப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
திருவாரூர், கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட, கொத்தங்குடி மற்றும் பாண்டுக்குடி கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில், வெண்ணாற்று பாசனத்தை நம்பி இப்பகுதி விவசாயிகள் நெல், பாசிப்பயறு , உளுந்து, பருத்தி போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக கூத்தாநல்லூரில் இருந்து பிரியும் சித்தார் தலைப்பு வாய்க்கால், முதலிபாதி வாய்க்கால், குடுபாதி வாய்க்கால் போன்றவற்றால் இப்பகுதி மக்கள் பாசன வசதி பெறுகின்றனர்.
கூத்தாநல்லூரில் இருந்து பிரியும் சித்தாறு தலைப்பு வாய்க்கால் மூலம் சுமார் 874 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. அதிலிருந்து பிரியும் உட்பிரிவு வாய்க்கால்களான முதலிபாதி வாய்க்கால், குடுபாதி வாய்க்கால் ஆகியவை மூலம் பாண்டுக்குடி மற்றும் கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த 150 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், இந்த வாய்க்கால்கள் மற்றும் வடிகால் கடந்த 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதாகவும், வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர் மற்றும் குப்பையும் கொட்டப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இதனால், முறையான நீர் பாசன வசதி இல்லாமல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர் பாசனத் துறை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “50 வருடங்களாக வடிகால் தூர்வாராமல் இருப்பதால் 150க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்தில் 50 மீட்டர் அகலத்தில் தொடங்கும் வாய்க்கால் சுருங்கி 50 அடி அகலத்திற்கு மாறியுள்ளது. இப்பகுதியில் உள்ள பல விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக இருப்பதால், ரியல் எஸ்டேட் செய்பவர்கள் தங்களுக்குச் சாதகமாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டுள்ளோம். ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை அகலப்படுத்தி. முறையாகத் தூர்வாரி தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காட்பாடி அருகே 6 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய நபர்கள்.. போலீசில் சிக்கியது எப்படி? - VELLORE Ganja Seized