திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரின் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள உழவர் சந்தை சுமார் 28 ஆண்டுகள் பழமையானது. இந்த உழவர் சந்தையில் திருவண்ணாமலை, வேங்கிக்கால், துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் அவர்களது விளைநிலங்களில் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளாக இந்த உழவர் சந்தையில் வியாபாரம் நல்லபடியாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா ஊரடங்கு காலத்தில் உழவர் சந்தை மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் அங்கு வியாபாரம் செய்யாமல் சாலையோரங்களில் விற்பனை செய்தனர்.
இந்த நிலையில், வேலூர் வழி சாலையோரங்களில் 80 தற்காலிக கடைகளும், காந்திநகர் புறவழிச் சாலையில் 30 கடைகளும், வேட்டவலம் சாலையில் 20 தற்காலிக காய்கறி கடைகளும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக வேங்கிக்கால் பகுதியில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிகளவில் வசித்து வருவதால், அவர்கள் அனைவரும் வேலூர் சாலையில் உள்ள தற்காலிக சாலையோர காய்கறி கடைகளில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
கரோனா காலகட்டம் முடிந்தும், பொதுமக்கள் தொடர்ந்து சாலையோர கடைகளிலே காய்கறிகள் வாங்கி வருகின்றனர். இதனால், உழவர் சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் சாலையோரங்களில் காய்கறிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரையும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் அனைவருக்கும் வியாபாரம் நடக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று (பிப்.19) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: வெறும் கனவு பட்ஜெட்.. மக்களுக்குப் பயன்தராத கானல் நீர்.. வார்த்தை ஜாலங்களே உள்ளன - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!