தென்காசி: தென்காசி மாவட்டம், இலஞ்சி கிராமத்திற்கு அருகே தனியார் உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பின்புறம் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலையில், அரசுக்கு சொந்தமான பொதுப்பாதையை தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி அப்துல் மஜித் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், 'விவசாய நிலத்திற்கு சென்று வரக்கூடிய அரசுக்கு சொந்தமான பாதையை பள்ளி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளது. மேலும் அந்தப் பள்ளியில் அமைந்துள்ள மாணவர் தங்கும் விடுதி, மாணவிகள் தங்கும் விடுதி, உணவருந்தும் அறை மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்டவைகள் அரசு விதிகளின்படி கட்டப்படவில்லை. வனத்துறையின் தடையின்மை சான்று, கோட்டாட்சியர் தடைச் சான்று உள்ளிட்டவைகள் எதுவும் பெறப்படாமல் கட்டப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வருகிறது.
அந்த வகையில் பொதுமக்கள், விவசாயிகள் உபயோகப்படுத்தும் அரசுக்கு சொந்தமான பொதுப்பாதையை வேலி அமைத்து ஆக்கிரமித்தல், எந்த வித தடையின்மை சான்றும் பெறாமல் பள்ளி விடுதி, நீச்சல் குளம் போன்றவை சட்ட விராதமாக கட்டி அமைத்தல், இலஞ்சி பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் பள்ளியின் உரிமையாளர் ரப்பானி என்பவர் செயல்பட்டு வருகிறார்.
எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயத்திற்கு செல்லக்கூடிய பொதுப் பாதை ஆக்கிரமிப்பினை அகற்ற வழிவகை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாலையில் வீணாக ஓடும் குடிநீர் மாலை அணிவித்து, மலர் தூவி எதிர்ப்பைத் தெரிவித்த பொதுமக்கள்.. வைரலான வீடியோ! - Tenkasi Road Water Issue