மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்தும், ராசி மணலில் அணை கட்ட வலியுறுத்தியும், கொள்ளிடம் ஆற்றில் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை அமைக்க கோரியும், வீராணம் ஏரியை தூர்வாரி நீர் கொள்ளளவை உயர்த்த வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலமையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது, “கடந்த ஆண்டு தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று 5 லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி செய்தோம். ஆனால், காவிரியில் உரிய நீரை பெற்று தராததால் மூன்று லட்சம் ஏக்கர் குருவை முற்றிலுமாக கருகியது. சம்பா சாகுபடிக்கும் உரிய நீரை பெற்று தராமல் மூன்று டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. மழையை நம்பி மட்டுமே சம்பா சாகுபடி பயிரிட்டு அறுவடை செய்தோம்.
தற்பொழுது இந்த ஆண்டு குருவை சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு 5 லட்சம் ஏக்கர் தரிசாக உள்ளது. சம்பா சாகுபடியும் செய்ய முடியுமா? என விவசாயிகளிடம் அச்சம் இருந்த நிலையில், தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. மேற்கொண்டு வரும் உபரிநீர் முழுவதுமாக 2 லட்சம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலில் விடப்படுகிறது.
இதனை தடுப்பதற்கு கொள்ளிடம் ஆற்றில் 5 கிலோ மீட்டர்களுக்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ராசி மணலில் தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்க வேண்டும் என வலியுறுத்தியும் அதற்கான எந்த திட்டமிடலையும் இதுவரை தமிழக அரசு முன்னெடுக்கவில்லை.
மேகதாது அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், ராசி மணல் அணைத்திட்டத்திற்கு தமிழக அரசு இதுவரை கோரிக்கை கூட வைக்காமல் வாய் திறக்காமல், காலம் தாழ்த்தி வருகிறது. மோடி அரசு மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் அதன் கொள்ளளவை இழந்துள்ளது.
எனவே, அதனை நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரி உடனே சீரமைக்க வேண்டும். இனியும் தமிழக அரசு ராசி மணலில் அணைக்கட்ட நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துமேயானால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.. புதுக்கோட்டை அருகே வினோத வழிபாடு! - Veeralaksmi Amman Temple