தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், கேரள வனப் பகுதிகளை ஒட்டி உள்ள தமிழக வனப்பகுதிகள் ஆகும். இந்த வனப்பகுதியில் சபரிமலை பகுதிகளில் வசிக்கும் யானைகளும் இடம்பெயர்ந்து அச்சன்கோவில் வனப்பகுதிக்குள் வந்துள்ளன.
மேலும் தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனப்பகுதிகளில் வன விலங்குகளுக்கும், யானைகளுக்கும் குடிநீர், உணவுகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அங்கிருந்து இடம்பெயர்ந்த யானைகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தென்காசியில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளின் அடிவாரப் பகுதிகளிலுள்ள ஏராளமான தனியார் தோட்டங்களில் வாழை, தென்னை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் நிரம்பி காணப்படுவதால், வனப்பகுதிகளில் இருந்து இறங்கிய யானைகள் தனியார் தோட்டங்களுக்குள் உணவு தேடி நடமாடத் தொடங்கியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, அடவி நயினார் கோயில் நீர்த்தேக்கம் பகுதியில் ஏராளமான யானைகள் வெப்பத்தின் காரணமாக நீர்த்தேக்கத்தை நோக்கி வந்துள்ளன. இதேபோன்று காசிதர்மம் கிராமப் பகுதிகளிலும் ஏராளமான யானைகள் அந்த பகுதியில் நடமாடத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும், தற்பொழுது மாங்காய் சீசன் காலம் என்பதால், ஏராளமான தனியார் தோட்டங்களில் தற்போது மாங்காய் பறிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், யானைகள் நடமாட்டம் காரணமாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பட்டாசுக்களை வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், உணவு தேடி சில நாட்களுக்கு முன்னர் புளியரை பகுதியில் உலா வந்த 15 வயது ஆண் யானை ஒன்று உணவின்றி உடல்நலக்குறைவால் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதை பிளந்த சத்தம்.. சிதறிய உடல்கள்.. 10 பேரை பலி கொண்ட சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன? - Sivakasi Cracker Factory Explosion