தென்காசி: கடையம் அருகேயுள்ள பூவன்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கனகராஜ் - பால சரஸ்வதி தம்பதி. கனகராஜ், கடையம் கிராமத்தின் முன்னாள் கவுன்சிலராக இருந்த நிலையில், தற்போது முழு நேர விவசாயியாக பல ஆண்டுகளாக காளை, பசு மாடுகளை அவரது வீட்டில் வளர்த்து வருகிறார்.
இதில் அவர் வளர்த்து வரும் ஒரு பசுமாடு, அவரது வீட்டிலேயே தற்போது முதல் சினையாகி கன்று ஈன்ற தயாராக உள்ளது. இந்த நிலையில், பசுமாட்டிற்கு விவசாய தம்பதி வளைகாப்பு நடத்தி அசத்தியுள்ளனர். பசுமாட்டின் கொம்பில் வளையல் அணிவித்தும், புத்தாடை அணிவித்தும், வளைகாப்பிற்கு சொந்த பந்தங்களை அழைத்து விருந்து வைத்து அசத்தினர்.
பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் இப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயி கனகராஜ் கூறுகையில், "எனது நீண்ட நாள் ஆசை, எங்கள் வீட்டில் கன்றுக் குட்டியாக இருந்து வளர்த்து வந்த பசுவிற்கு வளைகாப்பு நடத்த ஆசைப்பட்டேன். அதனை மகிழ்ச்சியுடன் நடத்திவிட்டேன்" என்றார்.
இதையும் படிங்க: தென்காசி அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. தனியார் பள்ளி நிர்வாகம் மீது விவசாயிகள் புகார் - Tenkasi Land ENCROACHMENT Issue