திருநெல்வேலி: மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து, தொழில்நுட்பம், கல்வி, விவசாயம், ஆராய்ச்சி உட்பட பல்வேறு துறைகளுக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறது என்னென்ன புதிய திட்டங்களை அறிவிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது போன்ற சூழ்நிலையில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் அதிகளவு நிதி ஒதுக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
பல ஆண்டு கனவு
குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு நேரடி புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்றும் அதன் மூலம் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வழியாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வரை புதிய வழித்தடம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும் மக்களின் பல ஆண்டு எதிர்பார்ப்பாக உள்ளது.
தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் அதிக அளவு சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. மேலும், கேரள மாநிலத்தை ஒட்டி இருப்பதால் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி போன்ற மூன்று மாவட்டங்களில் இருந்து அதிகளவு பொருட்கள் கேரளாவுக்கு செல்கிறது. தற்போது சாலை மார்க்கமாக இந்த பொருட்கள் சொல்வதால் தனி நபர்கள் மட்டுமே அதிகம் பயனடைகின்றனர். எனவே அரசுக்கு வருமானம் ஈட்டும் வகையிலும், பொது மக்கள் பயன்பெறும் வகையிலும் இந்த புதிய வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இது குறித்து தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், மதிமுக நிர்வாகியுமான உதயசூரியன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டி வருமாறு:
நேரடி ரயில் வழித்தடம்
தென் தமிழகத்தில் இருந்து தான் அதிக அளவு மக்கள் சென்னை போன்ற நகரங்களில் வசிக்கின்றனர். அவர்கள் விடுமுறை காலங்களில் சொந்த ஊருக்கு வந்து செல்ல போதுமான ரயில் வசதிகள் தென் மாவட்டங்களுக்கு இல்லை. அதே போல அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் தென் மாவட்ட ரயில் நிலையங்களில் இல்லை. இன்னும் இந்த ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படாமல் இருக்கிறது. தென்காசியிலிருந்து சென்னைக்கு செல்ல பொதிகை என்ற ஒரே ஒரு விரைவில் தான் பிரதானமாக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
தாமிரபரணி ரயில்
கொல்லம் எக்ஸ்பிரஸ் என்ற மற்றொரு விரைவு ரயில் இயக்கப்பட்டாலும் கூட அது பிற மாநிலத்தில் இருந்து இயக்கப்படுவதால் அங்கு இருப்பவர்களே அதிகளவு பயணிக்கின்றனர். எனவே தென்காசியில் இருந்து சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு செல்ல தாமிரபரணி என்ற பெயரில் அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், மேட்டூர் வழியாக புதிய ரயில் இயக்கப்பட வேண்டும். அதேபோல் மிக முக்கிய கோரிக்கையாக தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு நேரடி ரயில் வழித்தடம் புதிதாக உருவாக்க வேண்டும்.
துறைமுகங்கள் இணைக்கப்படும்
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவு தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களான தூத்துக்குடிக்கும், திருநெல்வேலிக்கும் நேரடி ரயில் இணைப்பு இல்லை. அரசுக்கும், பொது மக்களுக்கும் வருமானம் ஈட்டும் வகையில் தூத்துக்குடியில் இருந்து வல்லநாடு வழியாக திருநெல்வேலிக்கு நேரடி ரயில் பாதை உருவாக்க வேண்டும். இதன் மூலம் தூத்துக்குடி, கொல்லம், கொச்சின் போன்ற துறைமுகங்கள் இணைக்கப்படும். எனவே இந்த நிதிநிலை அறிக்கையில் தூத்துக்குடி டூ பாவூர்சத்திரம் வரை புதிய ரயில் வழித்தடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் அதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டும்'' என்று கூறினார்.
தென் மாவட்டங்களின் மாடர்ன் ரயில் நிலையம்
அதே போல ரயில் நிலையங்களில் நடைமேடை போதுமான அளவு நீளத்துடன் இல்லாததால் அதிகளவு ரயில் இயக்க முடியவில்லை என ரயில் பயணிகள் சங்க மாவட்ட தலைவர் பாண்டியராஜன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறுகையில், ''திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் 24 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை இல்லை. எனவே நடைமேடையை நீட்டிக்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
குறிப்பாக திருச்செந்தூரில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை இல்லாததால் இங்கிருந்து சென்னை - திருப்பதி மற்றும் இந்தியாவின் பல நகரங்களுக்கு ரயில்களை இயக்க முடியவில்லை. எனவே உரிய ஆய்வு செய்து திருச்செந்தூர் நடைமேடையை நீளப்படுத்த மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். கூடுதல் ரயில் நடைமேடை அமைக்க வேண்டும். அதேபோல் தென்காசி ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்ற வேண்டும். திருநெல்வேலி ரயில் நிலையத்தை தென் மாவட்டங்களின் மாடர்ன் ரயில் நிலையமாக மாற்ற வேண்டும். தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை சாலை ரயில் பாதையை உருவாக்க வேண்டும். இதன் மூலம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் இணைக்கப்படும்'' என்று கூறினார்.