சென்னை: மத்திய பாஜக அரசு, கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. அதனை இந்தியா முழுவதும் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக்கொள்கை வரைவு வெளியிட்டபோதே, எதிர்கட்சியாக இருந்த திமுக கடுமையாக எதிர்த்தது. மேலும், தேசியக் கல்விக் கொள்கை குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறது எனக் கூறி வந்தது.
மேலும், இந்த கொள்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் தமிழ்நாட்டிற்கு எதிர்ப்பாக இருப்பதால், அதனை ஏற்க முடியாது எனவும், தமிழ்நாட்டிற்கு என்று பிரத்யேகமாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து, ஓராண்டுக்குள் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதன்படி, 2022 ஜூன் 1ஆம் தேதி அமைக்கப்பட்ட முருகேசன் தலைமையிலான இந்தக் குழுவில், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் இடம்பெற்று இருந்தனர். பொதுமக்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரிடம் இருந்தும், கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் ஆலோசனைகளைப் பெற்று, முருகேசன் தலைமையிலான குழு அறிக்கையை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டு வந்தது.
ஓராண்டுக்குள் பணி முடியாத நிலையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு, அதன் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிக்கை இறுதி செய்யப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரைவு அறிக்கை தயாராகி 8 மாதங்கள் முடிவடைந்துள்ளன. இந்த அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே குழுவினர் நேரம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது வரை முதலமைச்சர் அலுவலகம் நேரம் ஒதுக்கி தராததன் காரணமாக, அறிக்கையை சமர்ப்பிக்க முடியவில்லை என குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும், இதுகுறித்து அக்குழுவினர் கூறுகையில், "தற்போது தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால், ஜூன் 4ஆம் தேதி வரை சமர்ப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்தனர்.
அதன் பின்னர், வரைவு அறிக்கையைப் பெற்று அரசு அதன் மீது கருத்து கேட்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 2024 - 2025ஆம் கல்வியாண்டில் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். எனவே, வரக்கூடிய கல்வி ஆண்டில் மாநில கல்விக் கொள்கை அமலுக்கு வர வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிக்கை தயாராகி பல மாதங்கள் ஆகியும், அறிக்கை பெறுவது கிடப்பில் போடப்பட்டிருப்பதால், மாநில கல்விக் கொள்கை திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்ற நிலை உள்ளது. மாநில கல்விக் கொள்கையை திமுக அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், 2025 - 2026வது கல்வி ஆண்டில் மட்டுமே அமல்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள இல்லம் தேடி கல்வித்திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறது என்பது ஆசிரியர் சங்கத்தினர்களின் குற்றச்சாட்டாகவும் இருந்து வருகிறது.
மேலும், குழுவில் முக்கிய உறுப்பினராக பணியாற்றிய முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன், மத்திய அரசின் கல்விக் கொள்கை அப்படியே மாநில கல்விக் கொள்கையில் காப்பி அடிக்கப்படுகிறது எனவும், உயர் அதிகாரிகள் தலையீடு அதிகளவில் உள்ளது என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை தெரிவித்து, குழுவில் இருந்து விலகினார்" என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; 4 பேர் நேரில் ஆஜர்! - Kodanad Case Investigation