சென்னை: சென்னையை பொறுத்தவரை மீன் மார்க்கெட் என்றாலே நம் அனைவரின் நினைவில் உடனடியாக வருவது காசிமேடு,
பட்டினப்பாக்கம் மீன் அங்காடி தான். ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு, பட்டினப்பாக்கம் மீன் அங்காடிகளில் இறைச்சி பிரியர்களின் கூட்டம் அலைமோதும்.
பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டை பொறுத்தவரை லூப் சாலையில் இருமுறமும் மீனவர்கள் மீன் கடைகள் அமைத்து மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். காமராஜர் சாலையிலிருந்து சீனிவாசபுரம் பகுதிக்கு செல்பவர்களுக்கும், சீனிவாசபுரம் பகுதியிலிருந்து காமராஜர் சாலையை அடைய நினைப்பவர்களுக்கும் லூப் சாலை மிக முக்கியமான சாலை மற்றும் பரபரப்பான சாலையாக உள்ளது.
பரபரப்பு நிறைந்த லூப் சாலை: மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரும் இந்த லூப் சாலையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் இறைச்சி பிரியர்கள் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடிக்கு படையெடுப்பதாலும், அவர்களின் வாகனங்கள் சாலையிலேயே விட்டுவிடுவதாலும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயணம் செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். எனவே, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
நவீன மீன் அங்காடி திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையில் மீனவர்களின் நலன், வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டும் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி அமைக்க அரசின் நிர்வாக அனுமதி கோரி விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில், பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டியுள்ள லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நிர்வாக அனுமதியும், உள்கட்டமைப்பு, வசதிகள் நிதியின் கீழ் ரூ.9 கோடியே 97 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைப் பெற்று வந்த இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒரிரு மாதங்களில் நவீன மீன் அங்காடி திறக்கப்பட உள்ளது.
சிறப்பம்சங்கள்: மேற்பரப்பில் முழுவதும் டென்சில் ரூஃபிங் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சுவருடன் 366 மீன் அங்காடிகள், மீன்களைச் சுத்தம் செய்வதற்கும், மீன்களை வெட்டுவதற்கான வசதிகள், மீன் அங்காடி வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகே வெளியேற்றும் வகையில் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்த வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளும், உயர் கோபுர மின் விளக்குகள் என நவீன மீன் அங்காடியாக இந்த லூப் சாலை மீன் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மீன் அங்காடி செயல்பட துவங்கியதும் பெரும் போக்குவரத்து நெரிசல் குறையும் என வாகன ஓட்டி கோபி ஜாக்சன் என்பவர் நம்மிடம் தெரிவித்தார். மேலும், நவீன மீன் அங்காடியில் அனைத்து விதமான வசதிகளும் இருக்கிறது. மழை, வெயில் காலங்களில் சிரமம் அடைய தேவையில்லை என்பது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், விரைவாக நவீன மீன் அங்காடி திறந்து தர வேண்டும் என மீனவர் ஜெயஸ்ரீ என்பவர் கூறினார்.
இந்த நவீன மீன் அங்காடி வெளி நாடுகளில் இருப்பது போன்ற தோற்றத்தில் வசதியுடன் அமைத்திருக்கும் நிலையில், விரைவில் திறந்து முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
இதையும் படிங்க: 2026 தேர்தல்; அதிரடி ஆக்ஷனில் திமுக.. அதிகார மையமாகும் குறிஞ்சி இல்லம்.. உதயநிதியின் திட்டம் என்ன?