மதுரை: நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. அதன்படி, தேசிய கட்சித் தலைவர்கள், தமிழக கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன்-யை ஆதரித்து எம்ஜிஆர் விளையாட்டு திடலில் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது, கூடைப்பந்து மற்றும் இறகுப் பந்து விளையாடிக் கொண்டிருந்த வீரர்களோடு இணைந்து செல்லூர் ராஜு மற்றும் மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் விளையாடி வாக்கு சேகரித்தனர்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை திமுக மக்களுக்கு அளித்துள்ளது. இதனை மக்கள் முழுவதுமாக உணர்ந்துள்ளனர். மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக அரசு மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சி பணிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். குறிப்பாக, எம்ஜிஆர் விளையாட்டு திடலில் மேற்கொண்ட உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் அதிமுக ஆட்சிக் காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டன.
சிங்கத்திற்கும் சிறுத்தைக்கும் நடுவில் மாட்டிக் கொண்ட ஆட்டுக்குட்டியாக அண்ணாமலை என்ன பேசுவது என்று தெரியாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை திமுக தான் முதன்மை எதிரி மற்ற கட்சிகளை நாங்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. பாஜகவை பொறுத்தவரை நோட்டாவுக்கு கீழே தான் வாக்குகளைப் பெறும்.
திமுக என்ற தீய சக்தியை ஒழிக்காமல் தமிழகம் முன்னேறாது என்று சொல்லித்தான் அதிமுகவை எம்ஜிஆர் வளர்த்தெடுத்தார். அதே வழியில் தான் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவை வழிநடத்திச் செல்கிறார். அண்ணா, பெரியார், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை எந்த அளவிற்குக் கொச்சைப்படுத்த முடியுமோ அப்படிப் பேசிய அண்ணாமலையிடம் ஒரு சீட்டு பெற்று இன்று ராமநாதபுரத்தில் பலாப்பழத்தைத் தூக்கிக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் நிற்பதைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.
படங்களில், டிரெய்லர் நல்லா இருக்கும். ஆனால், படம் ஃப்ளாப் ஆகிவிடும். அதேபோல, பாஜக தற்போது செய்வது எல்லாம் அந்த டிரெய்லர் மாதிரி, ஆனால் தேர்தல் முடிவு ஃப்ளாப் தான்” என்றார். தொடர்ந்து பேசிய அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன், மதுரையில் உள்ள பல்வேறு தரப்பினரும் திமுகவின் மீது அதிருப்தியில் உள்ளதைப் பார்க்கும்போது நாங்கள் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">