தூத்துக்குடி: நேற்று முன்தினம் (புதன்கிழமை) ரயில்வே துறை சார்பில், சென்னை-நாகர்கோவில் இடையான வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவை அதிமுக நிர்வாகிகள் மற்றும் லைன்ஸ் கிளப் நிர்வாகிகள் சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ கூறுகையில், “ சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.கே.சிங்கைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன். அதற்கு பதில் நடவடிக்கையாக இந்த ரயில் நிலைய நிறுத்தம் குறித்து நேற்று முன்தினம் (புதன் கிழமை) தென்னக ரயில்வே சார்பில் அறிக்கை வெளியானது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அறிவிப்பால் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். இந்த நேரத்தில் ரயில்வே துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னாள் அதிமுக கட்சி தலைவி ஜெயலலிதாதான் பலரது அரசியல் அடையாளமாக உள்ளார். ஆனால், அவர்கள் உண்மையில் அம்மாவின் தொண்டர்கள் அல்ல. அன்று ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள் எல்லாம் அவரின் பெயர், படத்தை பயன்படுத்தி இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்கிறார்கள். எனவே, டிடிவிக்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிமுகவில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே ஜெயலலிதாவின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த முடியும்.
மேலும், அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் பாஜக தமிழர்களின் நலத்திற்கு விரோதமான பிரச்னைகளை பாஜக கண்டு கொள்ளவில்லை என்ற ஒரே காரணம் தான். அண்ணாமலை எல்லாம் எங்களுக்கு பொருட்டே அல்ல. தமிழர் நலன் சார்ந்த விரோத போக்கை பாஜக கடைபிடித்ததால் தான் தமிழக தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி உயரவில்லை.
இந்த தேர்தலில் 12 கட்சிகளோடு கூட்டணி வைத்தும் 12 சதவீத வாக்கு வங்கியை கூட பாஜகவால் தாண்ட முடியவில்லை. டாக்டர் பட்டம் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியது, அவர்கள் ஆட்சி காலத்தில் வேண்டுமானால் அவ்வாறு செய்திருப்பார்கள். ஆனால், இவ்வாறு பேசுவதெல்லாம் கொச்சைப்படுத்து போன்று இருக்கிறது, இது கண்டிக்கத்தக்கது. அவ்வப்போது அரசியலில் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே சசிகலா ஏதேதோ பேசி வருகிறார்” என்றார்.
இதையும் படிங்க: புதிய குற்றவியல் சட்டத்தில் வேறுபாடுகள் கிடையாது" - காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேச்சு!