தேனி: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜனவரி 25ஆம் தேதி இலங்கையில் பவதாரிணி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்வதற்காக பவதாரிணி உடல் தேனிக்கு இன்று (ஜன.27) எடுத்துவரப்பட்டது. இதனையடுத்து லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக பவதாரிணியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு திரைத்துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பவதாரிணியின் உடலை காண தந்தை இளையராஜா தற்போது வருகை தந்த நிலையில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சம்பிரதாய முறைப்படி சடங்குகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பண்ணை வீட்டில் வைக்கப்பட்டிருந்த பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்து சென்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “பவதாரணியின் உயிரிழப்பு இசை உலகிற்கு மட்டுமல்லாமல், தமிழக மக்களுக்கும் பெரும் இழப்பு. தேனி மாவட்டத்திற்கும் பெரும் இழப்பு. பவதாரிணியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.