கோயம்புத்தூர்: கடந்த செப்.11ஆம் தேதி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி சம்பந்தமான தொழில்துறையினர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு தொழில்துறையினருடன் உரையாடினார். அப்பொழுது பல்வேறு தொழில் துறையினர் அவர்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அப்போது, அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் உரையாடியது வைரலான நிலையில், அது குறித்து அவர் மன்னிப்பு கேட்ட வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பரவியது. அதற்கு பலரும் பாஜகவிற்கு கண்டனங்களைத் தெரிவித்த நிலையில், இந்த வீடியோவை பரப்பிய விவகாரம் தொடர்பாக பாஜக சிங்காநல்லூர் மண்டல தலைவர் சதீஷை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினர்.
இந்த நிலையில், இது குறித்து பேட்டியளித்த சதீஷ், "நான் அந்த நட்சத்திர விடுதிக்குச் சென்றதில்லை. அந்த அளவுக்கு வசதியானவன் இல்லை. மேலும், அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் பொழுது அந்த இடத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் குமார் மட்டும்தான் இருந்தனர்.
இதையும் படிங்க : “சீட் ஷேர் பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமில்லை”.. டி.கே.எஸ்.இளங்கோவன்! - DMK VCK ALLIANCE ISSUE
அப்படி இருக்க, அந்த வீடியோ யாரால் எடுக்கப்பட்டது என்று இதிலிருந்தே புரிகிறது. இந்த விவகாரத்தில் மாநிலத் தலைவரே மன்னிப்பு கேட்கும் அளவிற்குச் சென்ற நிலையில், அந்த வீடியோவை எடுத்தது யார் என்று எனக்கு தெரிந்த பாஜக நிர்வாகிகள் குழுவில் பகிர்ந்து கேட்டேன்.
அந்த வீடியோவை பகிர்ந்ததால் என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டனர். இந்த விவகாரத்தில் என்னை சம்பந்தம் இல்லாமல் பலிகடா ஆக்கியுள்ளனர். இந்த வீடியோவை எடுத்த மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மீது மாநில கமிட்டி ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.