மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், "முதலமைச்சர் ஸ்பெயின், ஜப்பான், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அந்நிய முதலீட்டை ஈர்க்க ஏற்கெனவே சென்றார். தற்பொழுது மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்.
இந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் ரூ.9.99 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தோம். இதில், பல்வேறு நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. அதனால் 18 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்ற புள்ளி விபரத்தை வெளியிட்டார்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் ஒரு இடத்தில் கூட பெறவில்லை. ஆனால் பீகாரும், ஆந்திராவும் ஐந்து இடத்தில் இடம்பெற்றுள்ளன. வட மாநிலங்கள் நிதியை அள்ளி சென்று விட்டன. 40 நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தும் நெற்றியில் வைக்கும் காசு கூட பெற்று தர முடியாத முதலமைச்சராக உள்ளார்.
மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து புறக்கணித்து உள்ளது. தமிழகத்தின் நிதியை புறக்கணித்தத்தற்காக பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்க வில்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று தமிழகத்துக்கு நிதி தாருங்கள் என்று முற்றுகையிட்டு நிதியை பெற்று தந்திருக்கலாம்.
மீனவர்கள் பிரச்னை : மீனவர்கள் பிரச்னையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. பொதுவாக கடலில் சென்ற மீனவர்கள் காணவில்லை என்றால் 14 ஆண்டுகள் காத்திருந்து அதன்பின் நிதி வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்காலத்தில் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு அதன் மூலம் நிவாரணம் வழங்கலாம் என விதியில் திருத்தம் செய்யப்பட்டது.
40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழகத்திற்கு எதையும் பெறவில்லை. முதலமைச்சர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன். வானம் ஏறி வைகுண்டம் எப்படி போவான் என்ற கதையாக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு மூலம் நிதியை பெற முடியாதவர் எப்படி வெளிநாடு சென்று முதலீட்டை ஈர்ப்பார்.
நான்கு முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு அல்ல என்று முதலமைச்சர் கூறுகிறார். அதேபோல் அண்ணாமலை ஐபிஎஸ் படிப்பது கடினம் என்றும், நான் கஷ்டப்பட்டு படித்தேன் என்றும் கூறுகிறார். மற்றவர்களும் அப்படித்தானே படித்திருப்பார்கள்.
அண்ணாமலை கல்லூரி காலங்களில் தமிழக மக்களுக்காக, தமிழக உரிமைகளுக்காக, போராடி சிறை சென்று உள்ளாரா? ஆனால் நாங்கள் மாணவப் பருவத்தில் இருந்தே காவேரி, முல்லை, பொரியாறு போன்ற பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்தி சிறை சென்று உள்ளோம். அண்ணாமலை நாவை அடக்கி பேச வேண்டும் எடப்பாடி பழனிசாமி மலை என்றால், அண்ணாமலை மடுதான். எடப்பாடியார் எந்த பதவியையும் தேடி போகவில்லை பதவிகள் அவரைத் தேடி வந்தன.
ரஜினிகாந்த் விவகாரம் : திமுகவில் சீனியர்கள், ஜூனியர்கள் சண்டை தொடங்கிவிட்டது. சீனியர், ஜூனியர் சண்டைக்கு சத்தம் இல்லாமல் ரஜினிகாந்த் நெருப்பை பற்ற வைத்து உள்ளார். இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் நகைச்சுவை, பகைச்சுவை என்று அடுக்கு மொழியில் பேசி வருகிறார்கள்.
அதை அணைக்கும் முயற்சியில் வைரமுத்துவும், முதலமைச்சரும் தொடர்ந்து இறங்கி உள்ளனர். அது காட்டுத்தீயாக பரவி விட்டது. அதை எளிதில் அணைக்க முடியாது. இது எப்போதும் வேண்டுமானாலும், திமுகவில் அனல் பறந்து வெடிக்கும். அது ஆண்டவனுக்கு தான் தெரியும்" என கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : தேனியில் பாலியல் தொந்தரவு செய்து பெண் கொலை; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! - Theni Sexual harassment Case