ஈரோடு: ஈ.வெ.ரா சாலையில் உள்ள குடியரசு இல்லத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பிரதமர் மோடி பலமுறை தமிழகம் வந்து சென்றுள்ளார். முன்னதாக, முகமது கஜினி இந்தியாவுக்குப் பலமுறை வந்து கொள்ளையடித்துச் சென்றது போல இப்போது பிரதமர் மோடி தமிழகத்திற்குப் படையெடுத்து வருகிறார்.
இதனால் பிரதமர் மோடி உட்பட எத்தனை அமைச்சர்கள் தமிழகம் வந்தாலும், பாஜக வெற்றி பெறப் போவதில்லை. பாஜக ரோடு ஷோவை மக்கள் வெறுக்கிறார்கள். காமராஜரைப் பற்றி பேசுவதற்குப் பிரதமர் மோடிக்கு துளிகூட அருகதை இல்லை. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த போது பிரதமர் மோடியின் மூத்த தலைவர்களாக இருந்தவர்கள் காமராஜரைக் கொலை முயற்சி செய்ய முயன்றனர். அந்த வழியில் வந்த பிரதமர் மோடிக்கு காமராஜர் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?
இந்தியா 2047ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரிய வல்லரசாக வரும் என பிரதமர் மோடி சொல்கிறார். ஏன் சொல்கிறார் என்றால் பிரதமர் மோடி அதற்குள் அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியில் சொல்லப்படுகின்ற திட்டம் ஆங்கிலத்திலும் சொல்லப்படும்.
ஆனால் இவர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் படைத்த தமிழ்மொழி மீது அக்கறை இருக்கும் வகையில் காட்டிக் கொள்கிறார். தமிழகத்தில் முடிந்த அத்தியாயத்தினை பாஜக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் இந்த தேர்தலில் கதாநாயகனாக உதயநிதி இருக்கிறார். கடந்த 15 தினங்களாக நாள்தோறும் 10க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். வரும் காலத்தில், உதயநிதியை திமுக தொண்டர்கள் உட்பட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக இருந்த போது மேஜையின் கீழ் கைவிட்டு வேலை செய்த காரணத்தினால் அவரை வேலையை விட்டு நீக்கம் செய்துள்ளார்கள். அண்ணாமலை இரவு 10 மணிக்கு மேல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி இரவில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தேர்தல் அலுவலர்களை அசிங்கமாகப் பேசி உள்ளார். இந்த தேர்தலில் பிரதமர் மோடியோடு சேர்ந்து அண்ணாமலையும் காணாமல் போய்விடுவார். 52 ஆயிரம் வீடுகள் மாவட்டம் தோறும் கட்டி இருப்பதாகப் பச்சைப் பொய் சொல்கிறார்கள். பொய்யை மட்டுமே முதலீடாக வைத்துள்ள பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
கச்சத்தீவைக் காங்கிரஸ், திமுக இணைந்து இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது உண்மை. ஆனால் பாஜக கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சத்தீவு மீது உண்மையான அக்கறை இருந்தால் மீட்டு இருக்க வேண்டும்.
பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான், சீனா, பூடான் ஆகிய நாட்டை பார்த்தால் பயம். சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இந்திய நாட்டை அடகு வைக்க முயற்சி செய்யும் நீங்கள் தான் தேச விரோதி.
அமெரிக்காவில் கூட பழைய முறைப்படி, வாக்குச்சீட்டு முறை நடைமுறையில் உள்ளது. இதனால் இந்தியாவில் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரவேண்டும். அதிமுகவை உடைக்க அழிப்பதற்கு என்ன இருக்கிறது சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியவற்றால் பிரிந்து உள்ளது. வரும் காலத்தில் தங்கமணி, வேலுமணியாகப் பிரிய வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதியில் பெண்களுக்கு வருடம் 1 லட்சம் ரூபாய் வழங்குவது சாத்தியம். நயினார் நாகேந்திரனின் பணம் பிடிபட்டதாகச் சொல்லும் விவகாரத்தில் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். பிரதமர் மோடியின் கொத்தடிமைகளாகத் தேர்தல் ஆணையம் உள்ளது.
உலகத்தில் எல்லா நாடுகளிலும் குடிப்பார்கள். இந்தியாவில் எல்லா பகுதியிலும் குடிப்பார்கள். மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்றால் நாடு முழுவதும் கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிகச் சிறப்பாக உள்ளது.
கடந்த முறையை விட இந்த முறை வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்கும். நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ராகுல் பிரதமராக வந்தாலும் சரி, ஸ்டாலின் பிரதமராக வந்தாலும் சரி நாங்கள் வரவேற்போம்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சொல்லி வந்தது. கடந்த 3 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி காமராஜர் ஆட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் தான் இருக்கிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் மட்டும் இல்லை. தேர்தலே இருக்காது என்பது தான் எங்கள் கவலை" என்று பேசினார்.
இதையும் படிங்க: "ஸ்ரீபெரும்புதூருக்கு அகல ரயில் பாதை திட்டம்" - தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபால் கூறுவது என்ன? - Lok Sabha Election 2024