கோயம்புத்தூர்: கோவை ஆனைக்கட்டி சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளர் வெங்கடேஷ் பூபாலன் தலைமையில் அக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாஜக விவசாயி அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ், காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழருவி மணியன், "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். தமிழகத்தைப் பொறுத்தவரை இரு திராவிட கட்சியின் பிடியிலிருந்து விடுபடக் கல்லூரி பருவத்தில் இருந்தே ஒரு தவத்தைப் பின்பற்றி வருகிறேன். அந்த தவத்தை நிறைவேற்றும் மனிதராக அண்ணாமலையை பார்க்கிறேன்.
உண்மை, நேர்மை, ஒழுக்கம் நிறைந்த மனிதர்கள் தான் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் செல்ல வேண்டும். அண்ணாமலை மூலம் அரசியல் மாற்றம் வரும். அதிமுக, திமுக தான் 57 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். ஆனால் என்ன செய்தார்கள் என மக்களான நீங்களே நினைத்துப் பாருங்கள்.
அவர்கள் பொதுச் சொத்துகளைச் சூறையாடுகிறார்கள். திமுக, அதிமுகவினர்களில் முந்தைய தலைவர்களின் பின்புறம் என்ன?. தற்பொழுது உள்ளவர்கள் கோடி கோடியாய் குவித்து வருகிறார். தற்போதைய திராவிட கட்சித் தலைவர்கள் நியாயமானவர்களா?. அனைவரும் சாதி, மதம் என்பதைக் கடந்து வர வேண்டும்.
இண்டியா கூட்டணியைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. தமிழகத்தைக் காக்க வக்கில்லாத முதல்வர் இந்தியாவைக் காப்பேன் என கூறுகிறார். அந்தக் கூட்டணிக்கு என்ன லட்சியம் உள்ளது. நீலகிரி வேட்பாளர் ஆ. ராசா தேசப்பற்று உள்ளவரா?. முத்துராமலிங்க தேவரை மனதில் வைத்திருந்தால் அண்ணாமலைக்கு வாக்களியுங்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நேதாஜி மக்களை அழைக்கும் பொழுது ஆயிரம் ரூபாய் தருகிறேன் வாருங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ரத்தத்தைக் கொடுங்கள் என்று தான் சொன்னார். சென்னையை நீதி கட்சி ஆண்ட பொழுது தான் குற்றப்பரம்பரை சட்டம் இருந்தது. அதனை நீக்க அப்போது இருந்த யாரும் நினைக்கவில்லை. அந்த நீதிக் கட்சி வழி வந்தவர் தான் ஸ்டாலினும், அவருடன் இருப்பவர்களும்.
மன்மோகன் சிங்கை ஆட்சியில் அமர வைத்து கோடி கோடியாய் கொள்ளை அடித்தார்கள். பல்வேறு அமைச்சர்கள் கொள்ளையடித்தனர். இன்னும் 5 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வாய்ப்பு அளித்தால், இந்தியாவை வல்லரசு ஆக்கும் நிலையைக் கொடுப்பார். மக்களாகிய உங்கள் கண் முன்னால் ஸ்டாலினும், எடப்பாடியும் வரக்கூடாது. இந்த மண்ணின் நலனுக்காகத் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன் எனக் கேட்டுக்கொண்டு உரையை முடித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "அண்ணாமலைக்கு எங்களுடைய ஆதரவு கரத்தை நீட்டுகிறோம். அண்ணாமலை என்னைச் சந்தித்து ஆதரவை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 55 ஆண்டுகளாக இரண்டு திராவிட கட்சிகளுக்கும் எதிராகக் களம் ஆடுபவன் நான்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றால் கூட அதைத் தவறாகக் கருத மாட்டேன். ஏனென்றால் நம் கண் முன்னால் இருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு.
இந்த திமுக அரசுக்கு எதிரான வலிமையான கூட்டணியைப் பலப்படுத்தக்கூடிய பணியை மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலையிடம் கூறினேன். ராகுல் காந்தியை ஏற்றுக்கொள்ள மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தயாராக இல்லை.
அந்தக் கூட்டணி ஜெயித்தால் யார் பிரதமர் என முடிவெடுப்பதிலேயே போட்டி வரும். இந்த நாடு நலம் பெற வேண்டுமென்றால் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். அண்ணாமலை மூலமாகத்தான் பாஜக தமிழகத்தில் மூளை முடுக்குகளில் எல்லாம் பேசு பொருளாகியுள்ளது.
அந்த அண்ணாமலை மீது பிரதமர் நம்பிக்கை வைத்துள்ளார். இங்கு திமுக வெற்றி பெற்றால் ஸ்டாலின் பிரதமராக முடியுமா? அல்லது அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் ஆக முடியுமா?. ஆகவே இந்தத் தேர்தலில் ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் எந்த இடமும் இல்லை.
மின் கட்டண உயர்வுக்கு மோடியா காரணம்?. தொழில் பாதிப்புக்கு ஜிஎஸ்டி மட்டும் காரணம் அல்ல. மின்கட்டண உயர்வும் தான் காரணம். எல்லாமே தேர்தல் அரசியல் தான். தேர்தலுக்குப் பிறகும் பெட்ரோல் விலை உயரும் அடுத்த தேர்தலில் மீண்டும் குறையும்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: திடீர் நெஞ்சுவலியால் சுருண்ட நடிகர் சாயாஜி ஷிண்டே! மருத்துவமனையில் வீடியோ வெளியிட்டு நன்றி! - Sayaji Shinde