சென்னை: விருதுநகர் மாவட்டம், ஜோயல்பட்டியைச் சேர்ந்த 34 வயது பெண்மணி முத்தமிழ் செல்வி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு மே 23ஆம் தேதி முத்தமிழ் செல்வி, எவரெஸ்ட் சிகரத்தில் 8,848.86 மீட்டர் உயரத்தை அடைந்து சாதனை படைத்தார். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார், முத்தமிழ்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ள மவுண்ட் கொஸ்கியஸ்கோ என்ற சிகரத்தை ஏறி, தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி, புதிதாக மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார். தற்போது, சென்னை திரும்பிய முத்தமிழ் செல்விக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முத்தமிழ் செல்வி கூறுகையில், "நான் தொடர்ந்து ஏழு கண்டங்களில் உள்ள சிகரங்களை ஏறி சாதனை படைக்க திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறேன். தற்போது ஏறி சாதனை படைத்துள்ளது, ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள மவுண்ட் கொஸ்கியஸ்கோ, எனது ஐந்தாவது சிகரம் ஆகும். இது 2,228 மீட்டர் உயரமுள்ள மலை. இதனை, கடந்த 17ஆம் தேதி ஏறி சாதனை படைத்துள்ளேன்.
என்னுடன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மதன் ராஜ் என்பவரும் இந்த சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக இந்தியாவைச் சேர்ந்த மூன்று நபர்கள், ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளனர். ஆனால், அவர்கள் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளில் இந்த சாதனையைப் படைத்தனர்.
இந்த நிலையில், நான் ஒரு வருடத்திலேயே ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களையும் ஏறி சாதனை படைக்க முயற்சி செய்து வருகிறேன். அப்படி ஒரு வருடத்தில், ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை ஏறி சாதனை படைத்தால், இந்திய அளவில் முதலிடமும், உலக அளவில் மூன்றாம் இடமும் பெறுவேன்.
கடந்த 9 மாதங்களில் 5 கண்டங்களில் உள்ள உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளேன். தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊக்கமும், உதவியும் செய்து வருகிறது. விளையாட்டுத்துறை அமைச்சருக்கும், எனக்கு ஸ்பான்சர் செய்யும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்தபடியாக, வட அமெரிக்காவில் உள்ள உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைக்க உள்ளேன். வரும் மே மாதம், அந்த மலையில் ஏற தொடங்க உள்ளேன். இந்தியாவில் உள்ள எவரெஸ்ட் மலையை விட, ஆஸ்திரேலியாவில் உள்ள மலை உயரம் குறைவு. இதனால் இதில் ஏறுவதற்கு பெரிய அளவில் கஷ்டம் எதுவும் இல்லை.
வட அமெரிக்காவில் உள்ள சிகரத்தை ஏறிய பிறகு, அண்டார்டிகாவில் உள்ள சிகரத்தில் ஏற உள்ளேன். அடுத்த இரண்டு சிகரங்களில் ஏறுவதற்கும் சுமார் 80 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் .இதற்குத் தேவையான ஸ்பான்சர்கள் கிடைத்தால் உதவியாக இருக்கும். தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் உதவி வருகிறது. மத்திய அரசு சார்பில் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. எல்லாருடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு வலி இருக்கும். அதனை வலியாகப் பார்க்காமல் சாதனையாக பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: அடுத்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு! - Today Tamil Nadu Weather Report