ஈரோடு: சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி கோயில் முன் மிகப் பிரம்மாண்டமாக கம்பம் நடப்பட்டது. கம்பத்துக்கு பெண்கள் தினந்தோறும் புனித நீர் ஊற்றி மஞ்சள் பூசி வழிபட்டனர். கோயிலில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
இதனிடையே, பாரம்பரிய நிகழ்ச்சியான, கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்தை சுற்றி இளைஞர்கள் கம்பம் ஆடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு கம்பத்தாட்டம் ஆடினர். மத்தள இசைக்கு ஏற்ப இளைஞர்கள் சலங்கை கட்டி ஆடினர். கம்பத்தைச் சுற்றி வந்து ஆடும் இளைஞர்களின் கம்பத்து ஆட்டம் பெண்களை மிகவும் கவர்ந்தது. இரவு 10 மணிக்கு துவங்கிய பாரம்பரிய நடனம் நள்ளிரவு வரை நீடித்தது.
விழாவையொட்டி, சத்தி வடக்குப்பேட்டை, புளியம்கோம்பை, அத்தப்பகவுண்டன் புதூர், புளியம்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு செய்தனர். சிம்ம வாகன அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனையடுத்து, ஏப்ரல் 23ம் தேதி இரவு அம்மன் அழைப்பு, 24ஆம் தேதி காலை குண்டம் இறங்குதல், 25ஆம் தேதி மாலை மாவிளக்கு எடுத்தல், அன்றிரவு கம்பம் பிடுங்குதல் நடைபெறும். அதனைத்தொடர்ந்து 26ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 27ஆம் தேதி மஞ்சள்நீராட்டு விழா மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற உள்ளது.
முன்னதாக, விழாவையொட்டி கம்பத்துக்கு தேவையான அத்திமரத்தை தேர்வு செய்ய திருப்பணிக்குழுவினர், 500 மேற்பட்ட இளைஞர்கள் சென்று புதுவடவள்ளி பகுதியில் அத்திமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து மரத்தை வெட்டினர்.
இதனையடுத்து, கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட மரமானது கம்பத்துக்கேற்ற வடிவில் செதுக்கப்பட்டு அதற்கு மஞ்சள் பூசப்பட்டு பவானி ஆற்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கம்பம் நடப்பட்டது.
இதையும் படிங்க: "கடந்த முறை கோபேக் மோடி; இந்த முறை கெட்அவுட் மோடி" - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு! - Lok Sabha Election 2024