ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செங்கோட்டையன் காலனியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஜய் (26) துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வரும் நிலையில், இவரது தந்தை கண்ணன் (56) மூட்டை தூக்கும் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கண்ணன் தனக்கு தானே பேசிக் கொண்டு, மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜய் மற்றும் அண்ணன் மூர்த்தியுடன் சேர்ந்து தந்தை கண்ணனை நேற்று (நவ.30) இரவு இருசக்கர வாகனத்தில் கோபியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, நாகர்பாளையம் சாலையில் சென்ற கொண்டிருக்கும்போது வண்டியில் பெட்ரோல் தீர்ந்து போனதால், தந்தை கண்ணனையும், அண்ணன் மூர்த்தியையும் அங்கேயே இறக்கி விட்டு விட்டு பெட்ரோல் வாங்கிவிட்டு திரும்பியுள்ளார் விஜய்.
ஆனால், அங்கு தந்தை கண்ணனும், மூர்த்தியும் இல்லாததால், அண்ணனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு தந்தை கண்ணன் இருட்டில் அருகில் உள்ள தோட்டத்திற்குள் ஓடியதாகவும், தேடி பார்த்த போது கிடைக்கவில்லை என அண்ணன் கூறியதை அடுத்து, தந்தையை இருவரும் சேர்ந்து தேடி உள்ளனர்.
அதைத் தொடர்ந்து, இருவரும் ஒரு தோட்டத்திற்குள் ஆழ் இருப்பது போல் இருந்ததால் யார் என்று பார்க்க சென்றுள்ளனர். அப்போது துப்பாக்கியுடன் வந்த ஒருவர் தந்தை கண்ணனிடம் திருடுவதற்காக வந்தாயா எனக்கேட்டு, ஓடினால் சுட்டு விடுவேன் என கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில், திடீரென அந்த நபர் கண்ணனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டதாகவும், அதைத் தொடர்ந்து இருவரும் ஊருக்குள் சென்று உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு மீண்டும் வந்து பார்த்த போது, நீளமான அரிவாளை கண்ணன் கையில் பிடித்தபடி கண்ணன் உயிரிழந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, துப்பாக்கியால் சுட்டவர் கீரிப்பள்ளம் தோட்டத்தைச் சேர்ந்த மோகன்லால் என எனத்தெரிய வந்ததாக விஜய் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செங்கோட்டையன் காலனியில் உயிரிழந்த கண்ணனின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மொடச்சூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை விடுத்த உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.