தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஸ்ரீநகர் கோ ஆப்பரேட்டிவ் காலனியைச் சேர்ந்த தினேஷ் (33), வானூர்தி பொறியியல் படித்து ஜெர்மனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், தினேஷ் தனது சொந்த ஊர் மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், மக்களுக்காக அரசுடன் சேர்ந்து மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் அதிநவீன ட்ரோனை உருவாக்கியுள்ளார்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி மற்றும் மகப்பேறு சிகிச்சையில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக ட்ரோனை வடிவமைத்துள்ளார். இதுகுறித்து பொறியியல் பட்டதாரி இளைஞர் தினேஷ் கூறுகையில், "நான் வடிவமைத்த ட்ரோன் மற்ற ட்ரோன்களை விட வித்தியாசமானது. ஹெலிகாப்டர் போல் புறப்பட்டு, தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, இரவிலும் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன் 155 கிலோமீட்டர் வேகத்தில், 180 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது. மேலும், 7 கிலோ வரை உடல் உறுப்புகள், மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல முடியும். அதுமட்டுமின்றி, எங்கு இருந்தாலும் ட்ரோனை இயக்கும் அளவில் இதன் சாப்ட்வேர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன் மூலம் கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், அவர்களுக்குத் தேவையான மருந்துகளை நகர்ப்புறத்தில் உள்ள மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைக்க முடியும்.
மேலும், மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை செயலி (ஆப்) மூலம் பதிவு செய்துவிட்டால் எளிதில் கொண்டு சென்றுவிட முடியும். இதனால் நோயாளிகளை கிராமப்புறங்களில் இருந்து நகரப்புறங்களுக்கு அழைத்து வர வேண்டிய நேரத்தை மிச்சமாக்கும் பட்சத்தில் உயிரிழப்புகளை குறைக்க முடியும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தஞ்சை ஆட்சியர் பேரில் மோசடி; இருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை! - Money Fraud Case in thanjavur