திருப்பூர்: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் என் மண் என் மக்கள் எனும் யாத்திரையை தொடங்குவதாக அறிவித்தார்.
அதன்படி இந்த யாத்திரையானது கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். இதற்கான தொடக்கவிழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா கலந்து கொண்டு என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த யாத்திரை நடைபெற்றது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் மாதப்பூரில் நாளை (பிப்.27) பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
இதற்கான பணிகள் மாதப்பூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூலூருக்கு விமானம் மூலம் வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு நாளை (பிப்.27) மதியம் 2 மணி அளவில் வருகை தர உள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் மைதானத்தில் 3 ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1,100 ஏக்கர் பரப்பளவில் மாநாடு திடல், உணவு விநியோகம் செய்யும் பகுதி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தனித்தனி இடம் என அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு லட்சம் பார்வையாளர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு தாமரை பூ வடிவில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாநாடு நடைபெறும் மைதானம் முழுவதும் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 16 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாநாடு நடைபெறும் 27ஆம் தேதி அதாவது நாளை பல்லடம் நகரில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதோடு பிற மாவட்டங்களில் இருந்து பல்லடத்திற்கு வரும் கனரக வாகனங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு மாற்று வழிகளில் செல்ல காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Ind Vs Eng 4th Test: இந்தியா அபார வெற்றி! தொடரையும் கைப்பற்றியது!