சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் நேற்று (டிச.9) காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 53 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மதுரை 'டங்ஸ்டன்' சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.மோகன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
வானதி சீனிவாசன்: அந்த வகையில் தமிழக சட்டசபையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,"கோவைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த முதலமைச்சருக்கு நன்றி. கோயில் யானை புத்துணர்வு முகாம் இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து நடத்தப்படவில்லை. அதனால்தான் திருச்செந்தூரில் அது போன்ற சம்பவம் நடைபெற்றது.
நாங்கள் சிங்கப்பூர் போல தூய்மையான மாநகராக இல்லையென்றால், திருச்சியை போல தூய்மையான மாநகரமாக மாற்ற வேண்டும். கோவையில் தூய்மை பணியாளர்கள் சரிவர இல்லை" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்களில் வழங்கப்படும் அனைத்தும் வழங்கப்பட்டு தான் வருகிறது. ஏதேனும் ஒரு இடத்தில் நடைபெறவில்லை என்றால் அதைத் தெரிவிக்கவும். அனைத்து யானைகளும் நலமாக உள்ளன" என்று அமைச்சர் பதிலளித்தார்.
இதையும் படிங்க: கார்த்திகை தீபத் திருவிழா: "திருவண்ணாமலையில் கொப்பரை தீபம் ஏற்றப்படும்"- சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு உறுதி!
அதற்கு, "என்னதான் மனைவிகளுக்கு வசதி செய்து கொடுத்தாலும் வெளியில் அழைத்துச் செல்லாவிட்டால் அவர்கள் குறை சொல்லுவார்கள். அதுபோல யானைகளையும் புத்துணர்வு முகாமுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று வானதி சீனிவாசன் கிண்டலாக கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு "புதிதாக திருமணமான தம்பதிகள்தான் அப்படி வெளியில் செல்ல நினைப்பார்கள். இந்த யானைகள் நீண்ட நாட்களாக கோயில்களில் இருக்கும் பழக்கப்பட்ட யானைகள்தான். புத்துணர்வு முகாமுக்கு அழைத்து செல்லாமலேயே அவற்றுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.