ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக, தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் அரேப்பாளையம் - கொள்ளேகால் மற்றும் ஆசனூர் - சாம்ராஜ்நகர் இடையேயான சாலைகளில், காட்டு யானைகள் அடிக்கடி உலா வருகின்றன.
மேலும், அண்மைக் காலங்களில் பகல் வேளையிலும் கூட காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அரேப்பாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில், மாவள்ளம் பிரிவு எனும் இடத்தில் சுற்றித் திரிந்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, கோட்டாடை மலைக் கிராமத்தில் இருந்து பள்ளி மாணவ, மாணவியர் உள்பட மலைக் கிராம மக்களை ஏற்றிக் கொண்டு, ஆசனூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை காட்டு யானை வழிமறித்துச் சென்றது, பேருந்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், யானைகள் நடமாட்டத்தைக் கண்டு அச்சமடைந்து, சாலையைக் கடந்து செல்ல முடியாமல் வாகனங்களை சாலை ஓரமாக நிறுத்திச் சென்றனர்.
சிறிது நேரம் நடமாடிய காட்டு யானை, எதையோ தேடியபடி அனைத்து வாகனங்களையும் நோட்டமிட்டு, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இந்நிலையில், பகல் நேரங்களிலும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை உபயோகப்படுத்தக் கூடாது எனவும், வனப்பகுதியில் உள்ள சாலைகளில் மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்
அதேபோல், ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை, தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி பகுதியில் உலா வந்துள்ளது. இதனைக் கண்ட சோதனைச் சாவடியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் அச்சமடைந்தனர்.
அப்போது, சோதனைச் சாவடி அருகே வர முயன்ற ஒற்றை பெண் யானையை அங்கு பணியில் இருந்த வனத்துறை அதிகாரிகள், "இங்கே வராதே போ.. போ" என யானையை பார்த்து சத்தமிட்டுக் கூறியதும், அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. வனத்துறை அதிகாரியின் இந்த செயல் வீடியோவாக பதிவாகி, சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
இதையும் படிங்க: சத்துணவில் முட்டைகள் எண்ணிக்கை குறைவு..! சத்துணவு அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய ஆட்சியர் உத்தரவு!