திருநெல்வேலி: நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருநெல்வேலியில் உள்ள ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
அப்போது, கோயில் யானை காந்திமதி தும்பிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு மரியாதை செய்தது. மேலும் தும்பிக்கையில் வைத்து மவுத் ஹாரன் வாசித்தது பக்தர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரபல கோயில்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடியேற்றும் நிகழ்வு இன்றளவும் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஐந்து சிவசபைகளில் திருநெல்வேலியில் உள்ள ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபைபைய் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பாகும்.
இந்த நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோயில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணியால் வழங்கப்பட்ட தூண் முன்பு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக கோயில் யானை காந்திமதி மவுத் ஹாரன் வாசித்தது பக்தர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து தேசியக் கொடியை வைத்துச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து யானை முன் செல்ல பக்தர்கள், கோயில் ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் தேசியக்கொடியை கோயில் செயல் அலுவலர் ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அப்போது யானை காந்திமதி மூன்று முறை தும்பிக்கையை உயர்த்தியும், பிளிறியும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்தது. தொடர்ந்து கோயில் ஊழியர்களும் கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் நிறைவில் கொடிக்கு மகா தீபாராதனை நடைபெற்று சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: வேலூர் அருகே ஒரே கிராமத்தில் 3000 ராணுவ வீரர்கள்.. கம்மவான்பேட்டை ராணுவப்பேட்டையாக மாறிய ரகசியம் என்ன?