தேனி: தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு 1,200 கன அடி தண்ணீர் கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் தேக்கடி பகுதியில் உள்ள தமிழகப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் மதகு அருகே, காட்டுப் பகுதியிலிருந்து வந்த காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக சென்றது. ஆனால், தண்ணீர் குடிக்கும் போது, தவறி தண்ணீர் திறந்து விடும் மதகு முன்பு விழுந்துள்ளது. அதனைக் கண்ட நபர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் யானையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தண்ணீரின் வேகம் வினாடிக்கு 1,200 கன அடி என இருந்ததால் வனத்துறையினரது மீட்பு முயற்சி பயனளிக்கவில்லை. இதற்கிடையே, யானையினால் தண்ணீரில் நீண்ட நேரம் நீந்த முடியாமல் தத்தளித்தது.
அதனைத் தொடர்ந்து, அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டு, பின்னர் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு, நீரின் வேகம் குறைந்ததால் யானை தானாகவே நீந்தி மறுகரையை அடைந்து, பின்னர் தானாகவே காட்டுப்பகுதிக்குள் சென்றது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் மதகுகள் அருகே தவறி விழுந்த யானை, எந்தவித காயமுமின்றி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.