மதுரை: மதுரை ரயில்வே கோட்டப் பகுதியில் அதிக வளைவுகள் கொண்ட மலைப் பாதையான செங்கோட்டை அருகே உள்ள கேரளா மாநிலப் பகுதியான பகவதிபுரம் - எடமன் ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நிலையில், 34.67 கிமீ தூரப் புதிய மின்மயமாக்கப்பட்ட இந்த ரயில் பாதையைத் தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின்சாரப் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா இன்று (பிப்.27) அன்று ஆய்வு செய்தார். அந்த வகையில், சிறப்பு ஆய்வு ரயில் மூலம் பகவதிபுரத்தில் இருந்து காலை 09.55 மணிக்கு ஆய்வு துவங்கியது.
இந்த ரயில் பாதையில் மின் வழித்தடங்கள் பாதுகாப்பான தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த ரயில் பாதையில் உள்ள நீண்ட குகைகள், பாலங்கள், மாநில அரசின் உயர் அழுத்த மின்வழித்தடங்கள், நடை மேம்பாலங்கள் ஆகிய பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட முறையில் மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், ஆய்வு செய்யப்பட்டது.
இதுமட்டும் அல்லாது, புதிய ஆரியங்காவு, தென்மலை மற்றும் எடமன் ஆகிய ரயில் நிலையங்களில் அமைந்துள்ள மின்விசை நிலையங்களையும் ஆய்வு செய்யப்பட்டது. ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் பராமரிப்பு கருவிகள் மற்றும் பாதுகாப்பு கருவிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், இந்த ஆய்வு எடமன் ரயில் நிலையத்தில் மாலை 04.00 மணிக்கு நிறைவடைந்தது. பின்பு மின்பாதையில் 25,000 வாட்ஸ் மின்சாரம் பாய்ச்சப்பட்டு எடமன் ரயில் நிலையத்திலிருந்து பகவதிபுரம் வரை மின்சார ரயிலை இயக்கி ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா, மின் மயமாக்கல் முதன்மை திட்ட இயக்குநர் சமீர் டிஹே, இணை முதன்மை மின்சாரப் பொறியாளர் எம்.எஸ்.ரோஹன் மற்றும் உதவி மின் பொறியாளர் கே. நாராயண் ஆகியோருடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து குரல் கொடுத்ததன் விளைவாகக் கரோனாவின் போது ஏற்றப்பட்ட கட்டண உயர்வை ரயில்வே திரும்பப் பெற்றது - எம்.பி சு.வெங்கடேசன் கருத்து..