சென்னை: ஒரேநாடு ஒரே தேர்தல் எனும் மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய்க்கு வழி நெடுகிலும் ரசிகர்கள் சூழ்ந்து வரவேற்பு அளித்தனர். மஞ்சள் நிற உடை அணிந்த தமிழக வெற்றி கழகத்தின் பாதுகாப்பு குழுவினர் பனையூர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். காரில் இருந்து இறங்கி தொண்டர்களிடையே கையசைத்தபடி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்த விஜய் நிர்வாகிகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு செயற்குழு கூட்டத்தில் பங்கெடுத்தார்.
செயற்குழு கூட்டத்திற்கு 130 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 6 பேர் வரை கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் செயற்குழு, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஒரே நாடு ஒரே தேர்தல், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: தவெகவின் செயற்குழு தீர்மானத்தில்,"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அறிவிப்பும், அதனை சட்டமாக்குதலும் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகள். மக்களாட்சி தத்துவத்துக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள மத்திய பாஜக அரசு கொண்டு வர உள்ள இந்த சட்டத்தை செயற்குழு கண்டிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர் நிலைகள் உள்ளன. எனவே மத்திய மாநில அரசுகள் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். மக்களுக்காக தவெக சட்டரீதியாக போராட தயங்காது.
அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் பட்டபகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை காட்டுகிறது. கள்ளச்சாராய விற்பனை, இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் பழக்கம் போன்ற நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாமல் குறிப்பிட்ட சிலரின் நலனிலேயே அக்கறையுடன் செயல்படும் திமுக அரசுக்கு செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது.
மாதம் தோறும் மின்கட்டணமுறை அமல்படுத்த வேண்டும்: மாதம்தோறும் மின்கட்டணம் என்ற நடைமுறையை கைவிட்டு திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கும் தமிழனத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் தகைசால் தமிழர் விருது வழங்குகிறது. இதனை தவெக செயற்குழு வரவேற்கிறது,"என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “திருமாவளவன் சிறுபிள்ளைத்தனமாக செயல்பட மாட்டார்” - சீமான்!
செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், "தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றி பெற சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பாராட்டுகின்றேன். தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிக்கு 10 பேர் வீதம் பொறுப்பாளர்களை நியமிக்கவும் , மாவட்ட நகர , பேரூர் கழக வாயிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்கும் வகையில் நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்க வேண்டும்.
சமூக வலைதளங்களை ஆதாரத்தோடு கையாள வேண்டும் , மாற்று கட்சி விமர்சனங்களை கண்ணியத்தோடு கையாண்டு தக்க பதிலடி தர வேண்டும்,தரைக்குறைவான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் முன்வைக்க கூடாது,"என கூறினார்.
அதேபோல, 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மற்ற கட்சிகளில் உள்ளது போல் கிளையில் இருந்து மாநில பொறுப்புகள் வரை பதவிகள் வழங்குவது குறித்தும் அல்லது தற்போது உள்ள சூழலுக்கு ஏற்றார் போல் பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்