சென்னை: நாட்டில் ஜனநாயக திருவிழாவாகக் கருதப்படும் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் தேர்தல் அறிக்கையையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை வாங்கும் பணி தொடங்கியுள்ளதாகக் கூறினார்.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் 18ம் தேதிக்குள் தபால் வாக்குக்களைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தபால் வாக்கு வாங்க முதல் முறை வீடுகளுக்குச் செல்லும் போது வாக்காளர்கள் வீட்டில் இல்லை என்றால், இரண்டாவது முறை அவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் செல்வார்கள், இரண்டு முறை மட்டுமே தபால் வாக்குப் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
அப்போதும் அவர்கள் வீட்டில் இல்லையேல் வாக்குப்பதிவு நாளில் நேரில் வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார். சுவிதா செயலி மூலம் வேட்பாளர்கள் தங்களுக்குத் தேவையான பல்வேறு அனுமதியைப் பெறலாம் என கூறிய அவர், இது தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், இது தவிர்த்து மற்ற நிகழ்வுகளுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இடையில் ஒருங்கிணைத்துச் செயல்படுவது குறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல் வழங்கியதாகத் தெரிவித்த அவர், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும் பூத் ஸ்லிப் வழங்கப்படும் என்றும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் பூத் ஸ்லிப் வழங்கப்படாது எனவும், இதுவரை 13.08 லட்சம் பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானது என்றும், 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் (Critical polling station) என்று கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அந்த இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ரோடு ஷோ (Road show) நடத்தத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என கூறிய அவர், இதில் பிரதமருக்கு சில விதி விலக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. தபால் வாக்குகளை பெறும் பணிகள் தீவிரம்! - Lok Sabha Election 2024