திருப்பத்தூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரும், நடிகருமான மன்சூர் அலிகான், தொகுதி மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்புக்காக தேர்தல் பரப்புரையில் நேற்று (மார்ச் 19) ஈடுபட்டார்.
இதையடுத்து, முன் அனுமதி பெறமால், தேர்தல் விதிமுறைகளை மீறி மன்சூர் அலிகான் பொதுமக்களை சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக, ஆம்பூர் விஏஓ ராஜ்குமார், ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, விஏஓ அளித்த புகாரின் பேரில் தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டதாக, இந்திய தண்டனைச் சட்டம் 188வது பிரிவின் கீழ் மன்சூர் அலிகான் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் நேற்று (மார்ச் 19) கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த மன்சூர் அலிகான், பின்னர் பொதுமக்களை சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, "எனக்கு மக்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது. என்னை கூட்டணிக்கு கூப்பிட அனைத்து கட்சிகளும் பயப்படுகின்றன. சொந்தமாக உழைத்து கட்சி தொடங்கி உள்ளேன்.
ஜனநாயகம் என்பது தற்பொழுது கேலிக்கூத்தாக தான் உள்ளது. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக இந்த தேர்தல் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தீர்ப்பை எழுதிவிட்டு, தற்பொழுது எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு வருகிறார். 5 வைத்தால் 10, 10 வைத்தால் 20 என்ற மோடி மஸ்தான் வேலை போல், பிரதமர் மோடி செய்து வருகிறார்.
இதனை எதிர்த்து யாரும் வாயைத் திறந்து பேச மாட்டார்கள். ஆனால், நான் பேசி வருகிறேன். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். இந்த மாவட்டத்தை சுற்றி பசுமையாக்க வேண்டும். வேலூரை கொடைக்கானல் போல் மாற்றியமைக்க வேண்டும்.
இயற்கை வளத்தை உருவாக்கினால் தான் பாலாற்றில் தண்ணீர் வரத்து வரும். அப்படி பாலாற்றில் தண்ணீர் சென்றால், எவராலும் மணலைக் கொள்ளை அடிக்க முடியாது. இவை அனைத்துமே என்னால் தான் செய்ய முடியும். கூட்டணியில் சேர்ந்தால் நானும் கையைக் கண்டிக்கொண்டு அமைதியாகத் தான் நிற்க வேண்டும். 30ஆம் தேதிக்குப் பிறகு என்னுடைய கொடுவாலையும், அறிவாளையும் தூக்கிப் பேசுவேன்.
ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை உள்ளது. இந்திய ஜனநாயக புலிகள் என்பது இந்திய அளவுக்கு கொண்டு போக வேண்டும். தமிழர்களுக்கு பதவி வேண்டும், தமிழனை பிரதமர் ஆக்க வேண்டும். தமிழன் ஆள வேண்டும். நமது உரிமைகள் பாதிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் மீனவர் பிரச்னை, நீட் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் அப்படியே தான் உள்ளது.
நான் அடிப்படை மத வாதத்திற்கு எதிரானவன். மோடி ஒரு அடிப்படை மதவாதி. அடித்து விரட்டப்பட வேண்டிய மதவாதி. நான் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் போன்ற அடிப்படை மதவாதத்தை எதிப்பவன். மக்கள் காசு மோடியிடம் உள்ளது. அதனால் விளம்பரம் செய்து வருகிறார். நான் உங்களுக்கு கழுதையாக உழைப்பேன். இதற்கு முன் உங்களிடம் இருந்து ஓட்டை பெற்றக் கழுதைகள், உங்களுக்கு பேப்பர்களை உண்ண கொடுத்துவிட்டு, அனைத்து பணத்தையும் பிணைவரையில் சேமித்து வைத்துள்ளார்கள்.
நம்மிடம் லாக்கரில் வைப்பதற்கு கூட காசு இல்லை. சிஏஏ கொண்டு வருவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது. அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். சிஏஏ என்பது தவறான சட்டம். அதற்கு கெஜ்ரிவால் எதிர்ப்பால் பதிலளித்துள்ளார். அங்கு இருப்பவர்களை எதற்காக அழைக்கிறீர்கள். இங்கு இருப்பவர்களே வேலையில்லாமல் உள்ளார்கள். இந்தியா என்பது என் தாய் நாடு. இஸ்லாம் என்பது என்னுடைய வழிபாடு. அதுவே எனது ஒரே கொள்கை.
பாரத பிரதமருடன் போட்டி போட்டு, என்னால் நடிக்க முடியவில்லை. அதனால் தான் இங்கு வந்துள்ளேன். புதிதாக பாராளுமன்றம் கட்டியுள்ளார்கள். அங்கு நான் செல்ல நீங்கள் வாக்களியுங்கள். நீங்கள் போடக்கூடிய ஓட்டை நான் எங்கேயும் தூக்கிச் செல்லவிட மாட்டேன். திராவிட கட்சிகளுடன் நானே கூட்டணிக்காக சென்றேன். ஆனால் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் வந்து முதலமைச்சர் ஆகட்டும், நான் ஒரு மந்திரி ஆகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் உரிய ஆவணமில்லாத ரூ.24.32 லட்சம் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி