சென்னை: 18வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கிய முதல்கட்ட தேர்தலானது ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் பிறகு நாளை மறுநாள் ஜூன் 4ஆம் தேதி ஏழு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளும் ஒரே நாளில் எண்ணப்படவுள்ளது.
நாடு முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை, வட சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் ராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமாக அண்ணா பல்கலைக்கழகத்திலும் நடைபெற உள்ளது.
மேலும், மத்திய சென்னை தொகுதிக்கு லயோலா கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த மூன்று மையங்களிலும் முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்ததிலிருந்து, மூன்றடுக்கு பாதுகாப்பு பணி போடப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்கள் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கட்சி முகவர்கள் அவற்றை நேரடியாக காணும் வகையில் சிசிடிவி காட்சிகள் பதிவிகளை திரையிட்டுப் பார்க்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு துவங்க உள்ளது.
அதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை வாக்கு எண்ணிக்கை தகவல்களை தரும் வகையில் தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. வாக்கு எண்ணிக்கை அன்று கூடுதல் பாதுகாப்பாக சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மேற்பார்வையில், கூடுதல் ஆணையர் தெற்கு பிரேம் ஆனந்த் சின்கா, கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் தர்மராஜன் ஆகியோர் தலைமையில் மூன்று மையங்களிலும் சேர்த்து 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதில் 10 காவல்துணை ஆணையர்கள், 35 உதவி ஆணையர்கள், 70 காவல் ஆய்வாளர்கள், 120 உதவி ஆய்வாளர்கள் சட்டம் ஒழுங்கு ஆயுதப்படை போலீசார் என 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான ராணி மேரி கல்லூரி, தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான லயோலா கல்லூரியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வாக்கு எண்ணும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது எவ்வகையில் செயல்பட வேண்டும் என்பதை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
இதையும் படிங்க: உங்கள் குழந்தையின் உடல் எடையை நினைத்து கவலைப்படுகிறீர்களா?... யுனிசெஃப் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள்.!